அமெரிக்காவில் வனவிலங்குகள் பூங்காவில் உள்ள பெண் புலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவியுள்ளது. இது வரை 12 லட்சத்து 76 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 3 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
கொரோனா நோய் மனிதர்களுக்கு மட்டுமே பரவும். விலங்குகளுக்குப் பரவாது என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், தற்போது அமெரிக்காவில் ஒரு புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நியூயார்க் நகரில் உள்ள பிரானிக்ஸ் வனவிலங்குகள் பூங்காவில் உள்ள 4 வயதான நாடியா என்ற பெண் புலிக்குத் தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களாகப் பூங்காவில் உள்ள சிங்கங்கள் மற்றும் புலிகளுக்கு மூச்சு தொடர்பான நோய் அறிகுறி தென்பட்டிருக்கிறது. மருத்துவப் பரிசோதனையில் 4 வயதான புலிக்கு. கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதித்த ஊழியர் மூலம் இந்த நோய் விலங்குகளுக்குத் தொற்றியிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. சிங்கங்கள் உள்ளிட்ட 6 விலங்குகளுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இவற்றின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இருக்கும் மனிதர்கள் யாரும் தங்களுக்குப் பூரண குணமடையும் வரை, கால்நடைகள், செல்லப் பிராணிகள், விலங்குகளோடு நெருங்க வேண்டாம் என்று அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.