அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்கும் பொருட்டு, வெளிநாட்டினர் குடியேற்றத்திற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப் போவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் வேகமாகப் பரவியிருக்கிறது. அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக 8 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. சுமார் 42 ஆயிரம் பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர்.
இதனால், அமெரிக்காவின் பல மாகாணங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, ஏராளமானோர் வேலை இழந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கண்ணுக்குத் தெரியாத எதிரியின் தாக்குதலில் சிக்கியிருக்கும் நிலையில், நமது அமெரிக்கக் குடிமக்களின் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கும் பொருட்டு, வெளிநாட்டினர் குடியேற்றத்திற்குத் தற்காலிகத் தடை விதிக்க உத்தரவிடவுள்ளேன் என்று கூறியிருக்கிறார்.