மத்தியப் பிரதேசத்தில் 5 அமைச்சர்கள் பதவியேற்பு.. கட்சி மாறிய 2 பேருக்கு பதவி

4 BJP took oath as ministers in Madhya Pradesh.

by எஸ். எம். கணபதி, Apr 21, 2020, 13:35 PM IST

மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் அரசில் 5 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, பாஜக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலரை பதவி விலக வைத்து, எண்ணிக்கை விளையாட்டில் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக சிவராஜ் சவுகான், மார்ச் 23ம் தேதி பதவியேற்றார். மறுநாளே நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அமைச்சர்கள் யாரும் பதவியேற்க முடியவில்லை.


தற்போது அம்மாநிலத்தில் சுகாதாரத் துறைக்கு அமைச்சர் இல்லை. சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் பல்லவி ஜெயினுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கூடுதல் இயக்குனர் வீணா சின்கா உள்பட சில அதிகாரிகளுக்கும் கொரோனா ஏற்பட்டது. மேலும், இம்மாநிலத்தில் 1400க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதனால், முன்னாள் முதல்வர் கமல்நாத், பாஜக அரசைக் கடுமையாகச் சாடினார்.

இந்நிலையில், முதல்வர் சிவராஜ் சவுகான் தனது அமைச்சரவைக்கு 5 அமைச்சர்களை நியமித்தார். அதன்படி, பாஜக தலைவர்கள் நரோட்டம் மிஸ்ரா, கமல் படேல், மீனா சிங் ஆகியோரும், காங்கிரசிலிருந்து விலகி வந்த துல்சி சிலாவத், கோவிந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.


இந்த ஐவரும் இன்று காலை பதவியேற்றுக் கொண்டனர். போபாலில் பகல் 12 மணியளவில் நடந்த பதவியேற்பு விழாவில் கவர்னர் லால்ஜி டாண்டன், 5 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு வந்தவர்களில் 2 பேருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டிருப்பது, பாஜக தலைவர்கள் சிலருக்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளது.

You'r reading மத்தியப் பிரதேசத்தில் 5 அமைச்சர்கள் பதவியேற்பு.. கட்சி மாறிய 2 பேருக்கு பதவி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை