அமெரிக்காவில் பெரும்பாலான மாகாணங்களில் ஊரடங்கை தளர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர். அதிபர் டிரம்ப் அடுத்த வாரம் முதல் மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார்.உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. அந்நாட்டில் 10 லட்சத்து 64,533 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 61,668 பேர் உயிரிழந்து விட்டனர். நேற்று மட்டுமே 2,502 பேர் பலியாகியுள்ளனர்.
எனினும், பெரும்பாலான மாகாண கவர்னர்கள், ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளில் எவற்றை நீக்குவது என்பது தொடர்பான திட்டங்கள் தயாராகி விட்டதாகவும் விரைவில் அவை அமல்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கின்றனர்.
அந்நாட்டில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப், அடுத்த வாரம் முதல் மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், உலக சுகாதார நிறுவனம், சீனாவின் கைப்பாவையாக மாறியிருக்கிறது. அது உலக நாடுகளைச் சரியான நேரத்தில் கொரோனா குறித்து எச்சரிக்கத் தவறி விட்டது. நாம்(யு.எஸ்.) இது வரை கண்டிராத அளவில் மிகுந்த துயரங்களைத் தாங்கியிருக்கிறோம். ஏராளமானோரைப் பலி கொடுத்திருக்கிறோம் என்றார்.
மேலும், அவர் அடுத்த வாரம் முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் துவக்கவுள்ளதாகவும், அரியானாவுக்கு முதலில் பயணம் செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார். கொரோனா பரவியது முதல் அவர் வெளி மாகாணங்களுக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.