இந்தியாவில் 33,050 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில், 1074 பேர் பலியாகி விட்டனர்.சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(ஏப்.30) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 33,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 23,651 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 1074 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 1718 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதே போல், நேற்று மட்டும் கொரோனா பாதித்த 67 பேர் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 9318 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் நேற்று 31 பேர் இறந்ததையும் சேர்த்துப் பலி எண்ணிக்கை 400 ஆகியுள்ளது. குஜராத்தில் 3774 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 181 பேர் பலியாகியுள்ளனர்.அதே போல், மத்தியப் பிரதேசத்தில் 119 பேரும், டெல்லியில் 54 பேரும், ராஜஸ்தானில் 51 பேரும், உ.பி.யில் 36 பேரும், ஆந்திராவில் 31 பேரும் பலியாகியுள்ளனர்.