உலக அளவில் வெளியிடப்பட்ட பணக்காரர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் 200 இடங்கள் சரிந்தார்.
உலக அளவில் பணக்காரர்கள் பட்டியலை ஒவ்வோரு ஆண்டும் வெளியிடும் பழக்கத்தைக் கொண்டது ஃபோர்ப்ஸ் இதழ். இந்த ஆண்டும் அதே போன்றதொரு பட்டியலை அந்த இதழ் வெளியிட்டது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 766வது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டாலர்கலாகும். கடந்த முறை அவர் 544-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் 200 இடங்கள் கீழிறங்கக் காரணமாக ஃபோர்ப்ஸ் இதழ் கூறியதாவது, `ட்ரம்ப் அதிகம் சம்பாதிக்கும் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் சரிவு, அதிபர் தேர்தலுக்காக அவர் செலவிட்ட பணம் ஆகியவையே அவரது இந்த பெரும் சரிவுக்குக் காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட்டதால் மட்டும் 1 பில்லியன் டாலர்களை வாரி இரைத்துள்ளார் என்றும் அந்த இதழ் தெரிவித்துள்ளது.
முதல் இடத்தில், இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெஸோஸ் இருக்கிறார். அவரின் மொத்த சொத்து மதிப்பு 112 பில்லியன் டாலர்களாகும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ பில் கேட்ஸ் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 90 பில்லியன் டாலர்களாகும்.