ஆப்கானிஸ்தானின் டய்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்துள்ளனர். அக்கிரமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கமார் குல் என்பவர் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகள் சிறுமியின் கண் முன்பே அவரது தாய், தந்தையைச் சுட்டுக் கொன்றுள்ளனர். அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த சிறுமி குல், ஒருநொடி கூட தாமதிக்காமல், வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து தீவிரவாதிகள்மீது பதில் தாக்குதல் நடத்தியதில் இரண்டு தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதிகளைத் தைரியமாக எதிர்த்துச் சண்டையிட்ட அந்த சிறுமிக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதையடுத்து சிறுமி குறித்த தகவல் உலக நாடுகளிடையே வேகமாக பரவியது. சிறுமியை பாராட்டித் தீர்த்தனர் நெட்டிசன்கள். தற்போது தீவிரவாதிகள் சிறுமியைப் பழிவாங்கக் கூடும் என்பதால் ராணுவத்தின் காவலில் இருக்கிறார். இதற்கிடையே, நடந்த சம்பவம் தொடர்பாகப் பேசிய சிறுமி குல், தற்போது அந்நாட்டு ஊடகத்திடம் பேசியுள்ளார். அதில், ``அன்று இரவு எங்கள் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர் தீவிரவாதிகள். நான் என் தம்பியுடன் உறங்கிக் கொண்டிருந்தேன். தீவிரவாதிகளை என் அம்மா உள்ளே வரத் தடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் முடியவில்லை. அவர்கள் என் அம்மாவையும், அப்பாவையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டனர்.
சத்தம் கேட்டு எழுந்துவரும் முன் அனைத்தும் முடிந்துவிட்டது. என் கண் முன்னே அம்மாவும், அப்பாவும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அதிர்ச்சியில் அலறினேன். கோபம் தலையின் உச்சிக்குச் சென்றது. எங்கள் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து வெளியில் வந்து அங்கு நின்றிருந்தவர்களைச் சரமாரியாகச் சுட்டேன். அவர்களில் ஒருவன் எங்களைத் திருப்பி தாக்கினான். அப்போது என் தம்பி என்னிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கி பதில் தாக்குதல் கொடுத்தான். அதில் அந்த தீவிரவாதிக்குக் காயம் ஏற்பட்டது. உடனே தன்னுடன் இருந்தவனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான் அந்த தீவிரவாதி.
அம்மா, அப்பாவைக் கொன்றவர்களை நான் கொன்றுவிட்டேன் என நிம்மதி அடைந்தாலும் என் கண் முன் ரத்த வெள்ளத்தில் இருந்த அம்மா, அப்பாவிடம் பேச ஓடினேன். ஆனால் அவர்களிடம் பேச்சு மூச்சு இல்லை. அவர்களிடம் கடைசியாக ஒரு வார்த்தை கூட பேச முடியாத நிலைக்கு ஆளானேன். மிகுந்த வேதனைக்குள்ளானேன். என்னையும், என் தம்பியையும் தீவிரவாதிகள் மீண்டும் தாக்க வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். மீண்டும் தீவிரவாதிகளுடன் சண்டையிட நான் ரெடி"என்று துணிச்சலாகப் பேசுகிறார் சிறுமி குல்லுக்கும் அவரது தம்பிக்கும், அவரின் தந்தை ஏற்கனவே துப்பாக்கி பயிற்சி கொடுத்துள்ளார்.
சிறுவர்களுக்கு எதற்குத் துப்பாக்கி பயிற்சி எனச் சந்தேகம் எழலாம். அவர்கள் வாழ்ந்து வந்த கிராமம் அரசுக்கு ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கின்ற கிராமம். இதனால் கிராம மக்கள் அரசின் இன்பார்மர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தால் தலிபான்கள் அடிக்கடி அந்தக் கிராமத்தை தாக்கி வந்துள்ளனர். இதனால் தான் பாதுகாப்பு நடவடிக்கையாக தங்கள் குழந்தைகளுக்குத் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்துள்ளார் அந்த தந்தை. அவர் கற்றுக்கொடுத்த பயிற்சியே அந்த பிஞ்சு உயிர்களை தற்போது காப்பாற்றியுள்ளது.