நடிகர் வடிவேலு சுமார் இரண்டு வருடமாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். ஷங்கர் தயாரிப்பில் உருவான, இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தில் எழுந்த பிரச்சனை காரணமாகத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது முதல் இந்த பிரச்சனை முடிவடையாமலிருக்கிறது.இந்நிலையில் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற வடிவேலு கமலின் தலைவன் இருக்கிறான் படம் மூலம் மீண்டும் நடிக்க வரவுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் அப்படம் எப்போது தொடங்கும் என்பது பற்றி அறிவிப்பு எதுவும் வரவில்லை.
இந்நிலையில் தலைநகரம், படிக்காதவன், மருதமலை போன்ற படங்களை இயக்கிய சுராஜ் டைரக்ஷனில் வடிவேலு ஹீரோவாக நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. தற்போது அப்படத்தை வெப் சீரிஸாக இயக்கும் படி சுராஜிடம் வடிவேலு கூறியிருக்கிறாராம். கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாத நிலையில் இந்த முடிவை வடிவேலு எடுத்துள்ளாராம். சுராஜும் அதற்கேற்ப திகில் கலந்த காமெடி கதையாக மொத்தம் 9 பகுதிகளாக வருமாறு இதனை உருவாக்கி வருகிறாராம்.