1980களில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர பௌலர் என்றால் கிரெய்க் மெக்டர்மட்டை குறிப்பிடலாம். மெக்ரா, ஷேன் வார்ன் காலத்துக்கு முன்பு அந்த அணியின் சீனியர் பௌலர் மெக்டர்மட்தான். நீண்ட காலமாக அணியில் இடம் பிடித்த மெக்டர்மட், 71 டெஸ்ட் போட்டிகளில் 291 விக்கெட்டுகளும், 138 ஒருநாள் போட்டிகளில் 203 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இவரின் டெஸ்ட் பௌலிங் சராசரி 28.63 தான். 1987 உலகக்கோப்பையில் முன்னணி பௌலராக இருந்த மெக்டர்மட், 18 விக்கெட்டுகளை சாய்த்து ஆலன் பார்டர் தலைமையில் தங்கள் நாட்டுக்காகக் கோப்பையை வென்று கொடுத்தார். அந்த அளவுக்குத் திறமையான பௌலராக வலம் வந்தார்.
இவரின் காலத்தை அடுத்து இவரின் மகன் அலிஸ்டர் மெக்டர்மட் தனது 18 வயதிலேயே கிரிக்கெட் களத்துக்குள் என்ட்ரி கொடுத்தார். `புலிக்குப் பிறந்தது பூனையாகுமா' என்கிற பழமொழிக்கு ஏற்ப, அலிஸ்டர் ஆட்டிட்யூட் இருந்தது. 18 வயதில் `பர்ஸ்ட் கிளாஸ்' கிரிக்கெட்டில் அறிமுகமான போது இவரின் பௌலிங்கை பார்த்து, இவர்தான் அடுத்த ஆஸி., வேகப்பந்து வீச்சாளர் என்று புகழ்ந்தனர் அந்நாட்டுத் தேர்வுக்குழுவினர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது, 2011லேயே அவர் தேசிய அணியில் விளையாடுவார் எனப் பலரும் ஆருடம் சொல்லினர்.
அதற்குக் காரணமும் உண்டு.. இந்த காலகட்டங்களில் ஷெஃபீல்ட் ஷீல்ட் அணிக்காக விளையாடிய அலிஸ்டர், அந்த அணி பல சாம்பியன்ஸ் கோப்பைகளை வெல்ல உறுதுணையாக இருந்தார். பிக்பாஷ் டி20 லீக்கிலும் சாதிக்கத் தவறவில்லை அலிஸ்டர். 2வது சீசனில் இவர் ஆடிய பிரிஸ்பன் ஹீட் அணி கோப்பை வென்று அசத்தியது. இதுதவிர 20 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை 24.77 என்ற சராசரி என்ற நிலையில் இருந்தார். இதையெல்லாம் வைத்துத்தான், தேசிய அணியில் அலிஸ்டர் நிச்சயம் இடம்பெறுவர் என்றனர் பலரும். ஆனால் காயத்தினால் இவை அனைத்தும் பேச்சாகவே போனது.
சில ஆண்டுகளில் காயத்தால் மிகவும் அவதியுற்றார் அலிஸ்டர். 22-வது வயதில் ஆரம்பித்த காயம் தற்போது வரை அவரை ஆட்டிப்படைக்கிறது. காயத்தில் இருந்து மீண்டு வந்தாலும் மீண்டும் காயத்தால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடங்கிவிடும். கடந்த 7 ஆண்டுகளில் 4 முறை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்துள்ளார் அலிஸ்டர். கடைசியாக ஏற்பட்ட காயத்தால் 12 மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாத நிலைக்கு ஆளானார். இதனால் விரக்தியின் உச்சத்துக்குச் சென்ற அலிஸ்டர், தற்போது தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். ஓய்வை அறிவித்துள்ள அலிஸ்டருக்கு வயது 29 மட்டுமே..
மெக்ராத், பிரட் லீ அளவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அலிஸ்டரின் கிரிக்கெட் வாழ்க்கை காயத்தால் அஸ்தமனமாகியுள்ளது.