துல்கர் சல்மான், ரீதுவர்மா நடித்த படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். தேசிங்கு பெரியசாமி இயக்கி இருந்தார். காதலிப்பது போல் நடித்து துல்கரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கும் ஹீரோயின் கதையாக இது உருவாகி இருந்தது. இப்படம் திரைக்கு வந்து வரவேற்பைப் பெற்றதுடன் ஒடிடி தளத்திலும் வெளியானது. இப்படத்தைச் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்தார். பிறகு பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு போனில் அழைத்து வாழ்த்துக் கூறினார்.
ரஜினியின் வாழ்த்தால் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்த இயக்குனர் அது குறித்து தனது மகிழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். பின்னர் ரஜினி அவருடன் போனில் பேசிய ஆடியோ நெட்டில் வெளியாகி வைரலானது.படம் சூப்பர், இவ்வளவு நாட்கள் கழித்துப் படத்தைப் பார்த்ததற்காக ஸாரி என்று சொல்லியிருக்கும் ரஜினி முடிந்தால், தனக்கு ஒரு கதை ரெடி செய்யுங்கள் என்று அதில் கூறியுள்ளார்.
ரஜினியுடன் பேசிய ஆடியோ கசிந்தது பற்றி தேசிங்கு பெரியசாமி டிவிட்டரில் வருத்தம் தெரிவித்திருக்கிறார், இவ்வளவு அன்பு காட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி. அந்த உரையாடல் (ரஜினி போனில் வாழ்த்து சொன்னது) லீக் ஆனது எனக்குச் சந்தோஷம் இல்லை. அது மிகவும் பர்சனல் கால். என்னுடைய டிவிட்டில் கூட நான் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் இது துரதிஷ்டவசமாக நடந்துவிட்டது. எல்லாம் நன்மைக்கே. அன்பு மற்றும் ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறிக் கொள்கிறேன்" இவ்வாறு தேசிங்கு பெரியசாமி கூறியுள்ளார்.