வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவை நிர்வாகிகள் தேர்வு..

by எஸ். எம். கணபதி, Aug 3, 2020, 12:38 PM IST

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 2020ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தலில் கால்டுவெல் வேல் நம்பி தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகளில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை முக்கியமான சங்கமாகும். வட அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் தமிழர்களை ஒன்றிணைத்து இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு கலாச்சார, பாரம்பரியங்களை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சிகளை இந்த அமைப்பு வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

ஆண்டுதோறும் இந்த அமைப்பின் செயற்குழு நிர்வாகிகள் தேர்தல், ஜூலை மாதத்தில் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாகத் தேர்தலை இணைய வழியாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஆக.2ம் தேதி இரவு 12 மணி வரை இணைய வழித் தேர்தலில் ரகசிய வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 98 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகின. தேர்தல் முடிந்ததுமே வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.

பேரவையின் தலைவராக கால்டுவெல் வேல் நம்பி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட புஷ்ப ராணி வில்லியம்ஸ், சுந்தரபாண்டியன் சபாபதி ஆகியோருக்கு தலா 95 வாக்குகள் விழுந்ததால், சமநிலை பெற்றனர்.செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட பாலசுவாமிநாதன் 134 வாக்குகள் பெற்று வென்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சச்சிதானந்தன் வெங்கடகிருஷ்ணன் 56 வாக்குகள் பெற்றார்.
பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட சிவவேலுப்பிள்ளை 111 வாக்குகள் பெற்று வென்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாலமுரளி கோதண்டராமன் 79 வாக்குகள் பெற்றார்.இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட இளங்கோவன் தங்கவேலு 113 வாக்குகள் பெற்று வென்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அசோகன் தங்கராஜூ 77 வாக்குகள் பெற்றார்.

போர்டு இயக்குனர்களாக பழனிசாமி வீரப்பன் 100 வாக்குகள், பமீலா வெங்கட் 96 வாக்குகள் மற்றும் கிங்ஸ்லி சாமுவேல் 90 வாக்குகள் பெற்று வென்றனர்.
இயக்குனர் தேர்தலில் தேவராஜ் விஜயகுமார், நிர்மலா சுந்தரம், ஆகியோர் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.


More World News

அதிகம் படித்தவை