வெள்ளை மாளிகை அருகே திடீர் துப்பாக்கிச் சூடு.. பாதியில் முடிந்த டிரம்ப் பேட்டி..

Donald Trump abruptly escorted from briefing after shooting near White House.

by எஸ். எம். கணபதி, Aug 11, 2020, 10:14 AM IST

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது, வெள்ளை மாளிகைக்கு வெளியே திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதையடுத்து, டிரம்ப்பை அவசர, அவசரமாக அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை உள்ளது. பிரம்மாண்டமான இந்த பங்களாவில் உள்ள அலுவலகத்தில்தான் பல முக்கிய நிகழ்வுகள் இடம் பெறும். அதிபர் டொனால்டு டிரம்ப் தினமும் மாலையில் கொரோனா பாதிப்பு குறித்து, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்து வருகிறார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகை மீடியா ஹாலில் நேற்று(ஆக.10) மாலை டிரம்ப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் (யு.எஸ். சீக்ரெட் சர்வீஸ்) ஓடி வந்து அவரிடம் ஏதோ சொல்லி, பேட்டியை முடிக்கச் சொன்னார்கள்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. சீக்ரெட் சர்வீஸ் தான் துப்பாக்கியால் சுட்டது. யாரோ ஆயுதத்துடன் வந்தவர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார் என்று கூறினார்.உடனே செய்தியாளர்கள், இந்த சம்பவத்தால் உங்களுக்குப் பதற்றம் ஏற்படுகிறதா? என்று கேட்டனர். அதற்கு டிரம்ப், பதற்றம் ஏற்படவில்லை. உலகம் மிகவும் ஆபத்தானது. சீக்ரெட் சர்வீஸ் எப்போதும் போல் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் இருப்பதால் நான் மிகவும் பாதுகாப்பாகவே உணர்கிறேன் என்று பதிலளித்தார். டிரம்ப் பேட்டியைப் பாதியில் முடிக்கச் செய்து அவரை பாதுகாப்பு அதிகாரிகள், ஓவல் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

வெள்ளை மாளிகைக்கு வெளியே 17வது தெரு மற்றும் பென்சில்வேனியா பகுதியில்தான் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. போலீசார் இது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிகிறது. வரும் நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நிலையில், டிரம்ப் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பர், போலீசாரால் கொல்லப்பட்ட போது வெள்ளை மாளிகையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போது மீண்டும் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.

You'r reading வெள்ளை மாளிகை அருகே திடீர் துப்பாக்கிச் சூடு.. பாதியில் முடிந்த டிரம்ப் பேட்டி.. Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை