வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி நடவடிக்கை மற்றும் அதனால் ஏற்படும் சர்ச்சைக்குப் பெயர் போனவர். சில மாதங்களுக்கு முன், கிம் இறந்துவிட்டார் என்றும் அதனால் அவரது சகோதரி நாட்டை வழிநடத்துகிறார் என்றும் திடீரென தகவல் வெளியானது. ஆனால் அதற்கு சில நாட்கள் கழித்து பொதுமக்கள் முன் தோன்றினார். அதேபோல் உலக நாடுகள் கொரோனா பீதியில் உறைந்து கிடைக்க ஐந்து மாதங்கள் கழித்துத் தான் தங்கள் நாட்டில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டது என்றார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் கிம் தனது சகோதரி யோ ஜாங் உட்பட அவரது உதவியாளர்களுக்குக் கூடுதல் பொறுப்புகளைக் கொடுத்துள்ளதாகத் தென் கொரியாவின் உளவு அமைப்பு தகவல் வெளியிட்டது.
அதன்படி கிம்மின் சகோதரி யோ ஜாங்கே ஒட்டுமொத்த அரசு விவகாரங்களை வழிநடத்துகிறார் என்றாலும், கிம் வசமே நாட்டின் முழு அதிகாரம் இருக்கிறது என்றும் அந்த உளவு அமைப்பு தெரிவித்தது. கிம்மின் இந்த திடீர் மாற்றத்துக்குக் காரணம், பதவியின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை நீக்கவும், கொள்கை ரீதியிலான தோல்வி ஏற்பட்டால் குற்றஞ்சாட்டப்படுவதைத் தவிர்க்கவுமே இப்படி ஒரு நடவடிக்கை எடுத்து இருக்கிறார் என்று காரணமும் கூறப்பட்டது.
இந்நிலையில் இதே தென்கொரியா சேர்ந்த தலைவர் ஒருவர் தற்போது கிம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். தென்கொரியாவின் முன்னாள் அதிபரான கிம் டே ஜங்கின் உதவியாளராக இருந்த சாங் சங் மின் கிம் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ``கிம் ஜாங் கோமாவில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவரின் வாழ்க்கை இன்னும் முடியவில்லை. இதனால் வடகொரியாவின் அனைத்து அரசுப் பொறுப்புகளும் அவரின் தங்கையான யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சில மாதங்களுக்கு முன் கிம்முக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது. ஆனால் வடகொரியா கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் கிம் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்று அறிவித்து, அதற்கான வெளியிட்ட அனைத்துப் புகைப்படங்களும், வீடியோக்களும் போலியானவை என்று தற்போது தென்கொரியப் புலனாய்வுத் துறையினர் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.