தைவான் நாட்டு மக்களுக்குப் பட்டம் பறக்க விடுவது என்றால் அலாதி பிரியம். இதனால் இங்கு அடிக்கடி பட்டம் பறக்க விடும் திருவிழா நடத்தப்படுவது உண்டு. இந்நிலையில் நேற்று இங்குள்ள நான்லியாவ் கடற்கரையில் பட்டம் திருவிழா நடைபெற்றது. இதைப் பார்ப்பதற்காகக் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கடற்கரையில் திரண்டனர். இந்த சமயத்தில் அங்கிருந்த சிலர் ஒரு மிகப்பெரிய பட்டத்தைப் பறக்கவிட்டனர். அவர்களுக்கு அருகே ஒரு 3 வயது பெண் குழந்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அந்த பட்டத்தின் கயிற்றில் சிக்கிய அந்த குழந்தை பட்டத்துடன் மேலே பறந்தது.
இதைப் பார்த்த அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன செய்வது என தெரியாமல் அனைவரும் திகைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த பட்டம் மெதுவாக கீழே இறங்கி வந்தது. உடனே அங்கிருந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த குழந்தையை பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அந்த 3 வயதுக் குழந்தைக்கு இந்த சம்பவத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக இணையதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.