காட்டு யானையின் காலடியில் சிக்கி மயிரிழையில் உயிர் பிழைத்து ஓடும் ஒரு வாலிபரின் வீடியோ தான் தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆப்பிரிக்காவில் எங்கோ நடந்த இந்த சம்பவம் மயிர்க்கூச்செறியும் வகையில் உள்ளது. ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு காட்டுப்பாதை வழியாகச் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒரு வாலிபர் முன் திடீரென ஒரு காட்டு யானை வந்தது. யானையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர் நிலைதடுமாறி சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
பின்னால் ஒரு வாகனத்தில் வந்த சிலர் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கூக்குரல் எழுப்பி யானையின் கவனத்தைத் திசைதிருப்ப முயன்றனர். ஆனால் அதை அந்த யானை கண்டுகொள்ளவில்லை. தனது காலடியில் விழுந்து கிடந்த அந்த வாலிபரை யானை முதலில் தும்பிக்கையால் முகர்ந்து பார்த்தது. பின்னர் அருகில் கிடந்த சைக்கிளைத் தூக்கி பலமாகத் தரையில் அடித்தது. இதை மூச்சை அடக்கி அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த அந்த வாலிபர், தனக்கும் அந்த சைக்கிளின் கதி தான் ஏற்படும் எனக் கருதிக் கொண்டிருந்தார்.
மீண்டும் அந்த யானை வாலிபரின் அருகே சென்று தும்பிக்கையால் மெதுவாக அவரை தள்ளி விட்டது. அப்போது அங்கு நின்றிருந்தவர்கள் வாலிபரை எழுந்து ஓடுமாறு கூறினர். யானையின் கவனம் சைக்கிளின் பக்கம் திரும்பியதும் அந்த வாலிபர் தரையில் உருண்டபடியே எழுந்து ஓடினார். இதன் பின்னர் அந்த யானை கீழே கிடந்த சைக்கிளைத் தனது தும்பிக்கையால் எடுத்துக் காட்டுக்குள் தூக்கி வீசியது. ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரியான திக்விஜய சிங் என்பவர்தான் இந்த பரபரப்பு காட்சியைத் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.