நீச்சல்குளத்தினருகே கண் அசந்து தூங்கியவரின் காலை கரடி ஒன்று மெதுவாக தட்டியுள்ளது. உறங்கியவர், யாரோ தொடுவதை உணர்ந்து எழும்பியதும் கரடி ஓடிவிட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் கறுப்பு கரடிகள் பெருகி வருகின்றன. ஆகவே, அவற்றின் வாழ்விடம் விரிவடைகிறது. தற்போது அம்மாகாணத்தில் 4,500க்கும் அதிகமான கரடிகள் வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
இம்மாகாணத்தின் கிரீன்ஃபீல்டு என்ற பகுதியில் வசித்து வருபவர் மேத்யூ பீட். இவர் வீட்டிலுள்ள நீச்சல்குளத்தின் அருகே கண் அசந்துள்ளார். திடீரென தன் காலை யாரோ வருடுவதுபோல உணர்ந்ததால் கண்விழித்த அவர், கரடி நிற்பதை பார்த்து திடுக்கிட்டார். பீட் கண்விழித்ததும் கரடி மருண்டு வெளியே ஓடிவிட்டது. மேத்யூ பீட், தம் மொபைல் போனில் அக்கரடியை புகைப்படம் எடுத்து அதை தம் மனைவி டான் பீட்டுக்கு அனுப்பியுள்ளார்.
கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, உள்ளே கரடி வருவதும், மேத்யூ பீட்டை அணுகும்முன்னர் அது நீச்சல்குளத்தில் நீர் அருந்துவதும் பதிவாகியுள்ளது. ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ள இக்காட்சியை அநேகர் பார்த்து பின்னூட்டமிட்டு வருகின்றனர்.