எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பிடனின் மாற்றியமைக்கப்பட்ட வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்ததற்காக டிவிட்டர் நிறுவனம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை எச்சரித்துள்ளது. நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.ஜோ பிடன், வன்முறை குற்றங்களை ஆதரிப்பார் என்று பரப்புரை செய்து வரும் டிரம்ப், காவல்துறையை மோசமாக விமர்சிக்கும் பாடல் ஒன்றை ஜோ பிடன் தமது ஸ்மார்ட் போனில் ஒலிக்கச் செய்வது போன்ற வீடியோவை ரீ டிவிட் செய்திருந்தார்.
அந்த வீடியோவில் ஜோ பிடன், "நான் சொல்வதற்கு ஒன்று மட்டும் உள்ளது" என்று கூறுகிறார். பின்னர் காவல்துறையைக் குறித்து கீழ்த்தரமான வார்த்தைகளைக் கொண்ட பாடல் ஒன்றை ஒலிக்கச் செய்வது போன்று உள்ளது. பின்னர், "இவர்களில் ஒருவரைப்போல் எனக்குத் திறமை இருந்திருந்தால், பெருத்த ஆதரவோடு ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருப்பேன்" என்று அவர் கூறுவதுபோல் சித்திரிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை, சீனாவைப் பற்றிய குறிப்புடன் டிரம்ப் ரீடிவிட் செய்திருந்தார். ஆனால், உண்மையில் அந்த வீடியோ ஃப்ளோரிடாவில் பிடன் கலந்து கொண்ட பரப்புரையில் எடுக்கப்பட்டது. அதில் ஜோ பிடன் தமது போனில் 'டெஸ்பசிட்டோ' என்ற பிரபலமான லத்தீன் பாடலை சில நொடிகள் ஒலிக்கச் செய்கிறார். பிறகு கூட்டத்தினர் மத்தியில் பிரபல லத்தீன் பாடகர் லூயிஸ் ஃபோன்ஸி, ஜோ பிடனை அறிமுகம் செய்கிறார்.இந்த வீடியோ, மாற்றியமைக்கப்பட்டது (manipulated media) என்று டிவிட்டர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.