அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு கொரோனா பாதிப்பு நீங்கியது. அவரது உடல்நிலை சீராகி விட்டதாக வெள்ளை மாளிகை டாக்டர்கள் தெரிவித்தனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அங்கு இந்நோய்க்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நோய்க்கு மாத்திரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஹைட்ராக்சி குளோரோகுயின் நோய்த் தடுப்புக்கு ஓரளவு பயன்படுவதாகக் கூறப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதை முன்னெச்சரிக்கையாகச் சாப்பிட்டு வந்தார்.
இந்நிலையில், டிரம்ப்பின் ஆலோசகர் ஹோப்ஸ் ஹிக்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து டிரம்ப்பும், அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் இருவருக்குமே கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டது.
இதன்பின், வெள்ளை மாளிகை டாக்டர்களின் ஆலோசனையை ஏற்று டிரம்ப், ராணுவ மருத்துவமனைக்குச் சென்றார். அவர் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சையில் இருக்கும் போது திடீரென காரில் ஏறி, மருத்துவமனைக்கு வெளியே வந்து அங்குக் கூடியிருந்தவர்களைப் பார்த்து கையை அசைத்து விட்டு சென்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த திங்களன்று டிரம்ப் உடல்நிலை சீரானதை அடுத்து அவர் வீட்டுக்குத் திரும்பினார். அவருக்கு நேற்று(அக்.6) மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவருக்கு கொரோனா தொற்று நீங்கி விட்டதாகத் தெரிய வந்தது. இது குறித்து வெள்ளை மாளிகை டாக்டர் சீன் கான்லே கூறுகையில், டிரம்ப்புக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று பாதிப்பு நீங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது உடலில் ஆக்ஸிஜன் அளவும் 95 முதல் 97 சதவீதமாக உள்ளது. அவருக்கு இப்போது எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர் இரவில் நிம்மதியாகத் தூங்கினார் என்று தெரிவித்தார்.