அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், காணொலியில் நடத்தப்படவுள்ள விவாதத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தார். அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.அந்த நாட்டில் அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒரே மேடையில் நேருக்கு நேராக விவாதிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா வைரஸ் நோய்ப் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அதிபர் வேட்பாளர்களின் விவாத நிகழ்ச்சி தள்ளிப் போடப்பட்டு வந்தது.இந்நிலையில், அதிபர் வேட்பாளர்களின் முதல் விவாத நிகழ்ச்சி கடந்த செப்.29ம் தேதி நடைபெற்றது. ஒகியோ மாகாணத்தில் கிளேவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப், ஜோ பிடன் நேருக்கு நேர் கடுமையாக மோதிக் கொண்டனர். இந்த விவாதம் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆகியோர் கடந்த 7ம் தேதி நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்றனர்.இந்நிலையில், அதிபர் வேட்பாளர்களுக்கான 2வது விவாதம் வரும் 15ம் தேதி காணொலி காட்சியில் நடத்தவுள்ளதாக விவாதங்களுக்கான கமிஷன் அறிவித்தது. அதிபர் டிரம்ப்புக்கு சமீபத்தில் கொரோனா பாதித்து சிகிச்சைக்குப் பின் குணமாகி விட்டார். ஆனாலும், காணொளி மூலம் விவாதம் நடத்தப்படும் என்று கமிஷன் அறிவித்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவாதத்தைப் புறக்கணிக்கப் போவதாக டிரம்ப் தெரிவித்தார். அவர் கூறுகையில், விவாதங்களுக்கான கமிஷன் திடீரென விவாத நடைமுறைகளை மாற்றியது எங்களுக்கு ஏற்புடையதல்ல. அதனால், நான் காணொளியில் எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. நான் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணிப்பேன் என்றார்.
ஆனால், கமிஷன் செய்தி தொடர்பாளர் பிராங் பாரென்கோப் கூறுகையில், நாங்கள் இருதரப்பிலும் ஒப்புதல் கேட்ட பின்புதான் அக்.15ம் தேதி காணொளியில் விவாதம் நடைபெறும் என்று அறிவித்தோம் என்றார். டிரம்ப்புக்கு தோல்வி பயம் வந்து விட்டது, அதனால்தான் விவாதத்தைப் புறக்கணிக்கிறார் என்று ஜே பிடன் தரப்பினர் குற்றம்சாட்டினர். அதே சமயம், டிரம்ப் தரப்பினர் கூறுகையில், டிரம்ப் நன்கு குணமாகி விட்டார் என்று டாக்டர் சீன் கான்லே தெரிவித்திருக்கிறார். இன்னும் 5 நாட்கள் இடைவெளியும் இருக்கிறது. ஆனாலும், காணொளியில் விவாதம் நடத்துவதை ஏற்க முடியாது என்றனர். தற்போது, 2வது விவாதத்தை அக்.22 மற்றும் இறுதி விவாதத்தை அக்.29 தேதிகளில் நடத்த வேண்டுமென்று டிரம்ப் தரப்பில் கமிஷனுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.