உலகம் முழுவதும் நிர்வாணமாகச் சுற்றி வரும் பெல்ஜியம் நாட்டுத் தம்பதி அடுத்ததாகத் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த நிக் மற்றும் லின்ஸ் டி கோர்ட்டி தம்பதியைத் தெரியாதவர்கள் அதிகமாக யாரும் இருக்க முடியாது. உலகம் முழுவதும் இந்த தம்பதி நிர்வாணமாகவே சுற்றி வருகின்றனர் என்பது தான் இவர்களைப் பற்றிய சிறப்புத் தகவலாகும்.
கடந்த 12 வருடங்களாக இவர்கள் இவ்வாறு உலகம் முழுவதும் நிர்வாணமாகச் சுற்றி வருகின்றனர். இயற்கையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே தாங்கள் இவ்வாறு ஆடையில்லாமல் நிர்வாணமாக உலகம் முழுவதும் சுற்றி வருவதாக இருவரும் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் உலகில் எங்கெல்லாம் இதுபோல நிர்வாணமாகச் செல்லக்கூடிய ரிசார்ட்டுகள் மற்றும் இடங்கள் உள்ளன என்பது குறித்து உலக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதும் இவர்களின் நோக்கமாகும். இதற்காக 'நேக்கட் வாண்டரிங்ஸ்' என்ற பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தொடங்கியுள்ளனர்.ஒக்சாக்காவில் 3 மாதங்கள் செலவழித்த பின்னர் கடந்த ஜூலையில் தான் இவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றனர்.
பிரான்சிலும் பல இடங்களுக்குச் சென்றனர். இவர்கள் பிரான்சில் கூடுதல் நாட்களைச் செலவழித்தனர். அதற்கு என்ன காரணம் தெரியுமா? அங்கு தான் நிர்வாணமாகச் சுற்றித்திரிய ஏராளமான இடங்கள் இருக்கிறதாம். லாக் டவுனுக்கு முன்பு இருவரும் மெக்சிகோவுக்குச் சென்றிருந்தனர். அங்கு இருந்த போதுதான் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் இருவரும் மெக்சிகோவிலேயே சில மாதங்கள் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. சமீபத்தில் தான் இருவரும் பெல்ஜியம் திரும்பினர்.
ஹோண்டுராசில் உள்ள யூட்டிலா தீவில் நிர்வாணமாக ஸ்கூபா டைவிங் செய்ததை மறக்கவே முடியாது என்கின்றனர் இவர்கள் இருவரும். போர்ச்சுக்கலிலும், பின்னர் அமேசான் காடுகளிலும் நிர்வாணமாகச் சுற்றியதும் மறக்க முடியாத நினைவுகள் என்றும் கூறுகின்றனர். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களைப் போன்ற மனநிலை உள்ளவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதே தங்களது லட்சியம் என்று நிக்கும், லின்சும் கூறுகின்றனர். நாங்கள் ஒரு ஊக்க சக்தியாக இருப்பதாகப் பலரும் எங்களுக்கு மெயில் அனுப்புகின்றனர்.
லாக் டவுன் சமயத்தில் எங்களது வீடியோக்களுக்கான பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர் என்று கூறும் இவர்கள், அடுத்ததாகத் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். தாய்லாந்தில் விரைவில் ஒரு நிர்வாண கடற்கரை திறக்கப்பட உள்ளது. அங்கும் செல்ல இருவரும் திட்டமிட்டுள்ளனர்.