திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று(அக்.10) தரிசனம் செய்தார்.வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டுமென்று அவரது ஆதரவாளர்கள் கோரி வந்தனர். ஆனால், அதற்குத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டை போட்டு வந்தார். கடைசியாக நடந்த செயற்குழுவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க முயற்சி நடந்தது. ஆனால், காரசார மோதலுக்குப் பின் அது தள்ளி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடையே சில நாட்களாக கடும் பேரம் நடந்தது. இறுதியில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஓ.பி.எஸ். அறிவித்தார். 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டு, கட்சிக்குள் இருந்த குழப்பம் தீர்ந்தது.இந்நிலையில், திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் இன்று சாமிதரிசனம் மேற்கொண்டார். இன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால், காலையில் சிறப்புத் தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
அப்போது வி.ஐ.பி. தரிசனத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், சரோஜா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.அனைவரும் நேற்றிரவே திருமலைக்கு வந்து சேர்ந்திருந்தனர். சாமி தரிசனம் முடிந்ததும் ஓ.பன்னீர் செல்வத்திற்குக் கோயில் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தினர். ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்குப் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.