தன்னையே பாதுகாத்துக் கொள்ளத் தெரியாத டிரம்ப் எப்படி அமெரிக்க மக்களைக் காப்பாற்றுவார் என்று முன்னாள் அதிபர் ஒபாமா தாக்கியுள்ளார்.அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். தற்போது இருவரும் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே, அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்த போது அவர் திடீரென காரில் வெளியே சுற்றி வந்து தனது ஆதரவாளர்களைப் பார்த்துக் கையசைத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜோ பிடனுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா நேற்று பிலடெல்பியாவில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:அமெரிக்காவில் கடந்த 8 மாதங்களாக கொரோனா பாதிப்பால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இடையே சிறிது கட்டுப்பட்டிருந்தாலும் தற்போது மீண்டும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. அதிபர் டிரம்ப் திடீரென எதுவும் செய்து மக்களைக் காப்பாற்றி விட மாட்டார். அவர் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான அடிப்படை விஷயங்களைக் கூட சரியாகச் செய்வதில்லை. இது ஒன்றும் ரியாலிட்டி ஷோ அல்ல. மக்களின் வாழ்க்கைப் பிரச்சனை.திறமையில்லாத அதிபரின் ஆட்சியால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிரம்ப் சமூகத்தில் ஒற்றுமையைக் குலைத்துப் பிரித்தாளும் முயற்சியில் ஈடுபடுகிறார். இனவேறுபாடுகளைத் தூண்டும் வகையில் செயல்படுகிறார். இது நமது வருங்கால சந்ததிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். நமது குழந்தைகளைப் பாதிக்கும். எனவே, இன்னொரு 4 ஆண்டுகளை நாம் வீணாக்கி விடக் கூடாது. மக்கள் திரண்டு வந்து அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு ஒபாமா பேசினார்.