அமெரிக்க அதிபர் தேர்தல்.. ஜோ பைடன் 264 இடங்களை வென்று முன்னிலை.. நீதிமன்றத்தில் டிரம்ப் வழக்கு..

by எஸ். எம். கணபதி, Nov 5, 2020, 10:23 AM IST

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் 264 இடங்களை பெற்று முன்னிலையில் உள்ளார். டிரம்ப் 214 இடங்களுடன் பின்தங்கியுள்ளார். எனினும், குடியரசு கட்சியினர் வழக்கு தொடர்ந்துள்ளதால், இழுபறி நீடிக்கிறது.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிட்டார்.

துணை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செனட்டர் கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.தேர்தல் முடிந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் ஆகிய இருவருமே ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு வந்தனர். ஒவ்வொரு மாகாணத்திலும் கிடைக்கும் வாக்குசதவீதத்தைப் பொறுத்து, எலக்ட்டோரல் காலேஜ் எனப்படும் அதிபரை தேர்ந்தெடுக்கும் சபைக்கான எண்ணிக்கை முடிவு செய்யப்படும். இதில் மெஜாரிட்டி என்பது 270 இடங்களாகும். இந்த எண்ணிக்கையை கைப்பற்றினால் அதிபராகி விடலாம்.

நவ.4ம் தேதி நிலவரப்படி, எலக்ட்டோரல் காலேஜ் வாக்குகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 238 இடங்களை கைப்பற்றி முன்னிலையில் இருந்தார். குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 213 இடங்களை கைப்பற்றியிருந்தார். எனினும், யார் அதிபராக வெற்றி பெறுவார் என்பது இழுபறியாக நீடித்தது. இந்நிலையில், மிச்சிகனில் ஜோ பைடனுக்கு 49.9 சதவீத வாக்குகளும், டிரம்புக்கு 48.6 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. ஏற்கனவே, அமெரிக்காவின் நியூ மெக்சிகோ, நியூ ஹார்ம்ஷயர், நியூயார்க், வெர்மான்ட், மேரிலேண்ட், மசாசூட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர், வாஷிங்டன், கொலராடோ, கலிபோர்னியா, இல்லினாய்ஸ், விஸ்கான்சின் உள்ளிட்ட மாகாணங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.

மிச்சிகன் மாகாணத்தில் 16 இடங்களை கைப்பற்றியதன் மூலம் 264 இடங்களில் ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளார். டிரம்ப் 214 இடங்களுடன் பின்தங்கியிருக்கிறார். இன்னும் வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படவில்லை. தற்போது பென்சில்வேனியா, நவேடா உள்பட 5 மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். மேலும், மெயில் ஓட்டு என்னும் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். நவேடா என்ற சிறிய மாகாணத்தை ஜே பைடன் கைப்பற்றினாலே, அவர் அதிபராவதற்கான 270 இடங்களை பெற்று விடுவார்.இதற்கிடையே, டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் மிக்சிகன், பென்சில்வேனியா உள்பட 5 மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால், அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குழப்பநிலை நீடித்து வருகிறது.

You'r reading அமெரிக்க அதிபர் தேர்தல்.. ஜோ பைடன் 264 இடங்களை வென்று முன்னிலை.. நீதிமன்றத்தில் டிரம்ப் வழக்கு.. Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை