அமெரிக்க அதிபருக்கு என்ன வசதிகள் உண்டு தெரியுமா ?

by Balaji, Nov 6, 2020, 16:35 PM IST

அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பிடன் என்று சொல்லப்படும் நிலையில் பழைய அதிபரான ட்ரம் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி.. வழக்கு என்று அது இது என்று அதகளப்படுத்தி கொண்டிருக்கிறார்.இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் ஒருவர் அமெரிக்க அதிபர் ஆனால் அவருக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்..

உலகத்தின் எந்த நாடாக இருந்தாலும் ஆட்சியாளர்கள் மட்டும் மிகவும் வசதியாகவே இருக்கிறார்கள்.அமெரிக்க அதிபரைத் தெரியாத உலக மக்கள் மிகவும் குறைவு. காரணம், அமெரிக்க அதிபர்கள் அத்தனை பிரபலம். உலகில் எந்தவொரு நாட்டு விவகாரத்தில் யாருடைய அனுமதியின்றித் தலையிடும் அதிகாரம் படைத்தவர் அமெரிக்க அதிபர். உலக அதிபர்களிலேயே மிகவும் பவர்புல் ஆசாமி.

அமெரிக்க அதிபரின் சம்பளம் ஓராண்டிற்கு 4 லட்சம் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 2.6 கோடி ரூபாய். இது தவிர ஆண்டு செலவுக்காக 50 ஆயிரம் டாலர்கள், பயணச் செலவிற்காக வருமான வரி பிடித்தம் இல்லாத ஒரு லட்சம் டாலர்கள். பொழுது போக்குக்காக 19 ஆயிரம் டாலர்கள் என உண்டு. இதைத் தவிர மற்ற அரசு ஊழியரைப் போல இதர படிகளும் சம்பளம் உயர்வும் உண்டு.

வெள்ளை மாளிகை தான் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம். மருத்துவ வசதி, பொழுதுபோக்கு அம்சங்கள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சேவைகள் எனச் சகலமும் அந்த மாளிகையில் உண்டு.

அதிபரின் அலுவலக நிமித்தமான உணவு உபசரிப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கான செலவுகளை அமெரிக்க அரசே ஏற்றுக் கொள்ளும். தமது ஆடைகளைச் சலவை செய்து கொள்ள, தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய விருந்தினர்களுடனான விருந்துகளுக்கு அதிபர் தமது சொந்த பணத்தை தான் செலவு செய்துகொள்ளவேண்டும்.

அமெரிக்க அதிபருக்கு உரிமையான மற்றொரு இடம் கேம்ப் டேவிட் எனப்படும் மலைப் பகுதி ராணுவ முகாம். பாதுகாப்பு மிகுந்த இந்தப் பகுதியை, பொழுதுபோக்குக்காகவும், முக்கியக்கூட்டங்களை நடத்தவும் அதிபர்கள் பயன்படுத்துகிறார்கள். இது தவிர 70 ஆயிரம் சதுரடிக்கும் அதிகமான பரப்பு கொண்ட பிளையர் ஹவுஸ் தான் அமெரிக்க அதிபரின் ஓய்வு இல்லமாகத் திகழ்கிறது.

ஊருக்குள் அவர் மேற்கொள்ளும் பயணத்திற்காக ஆயுதங்கள் தாங்கிய, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சொகுசு லிமோசைன் கார் உள்ளது. இதில் பாதுகாப்பு அம்சங்களுக்கென நவீன பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டு பயணத்திற்காகச் சிறப்பு போயிங் 747 - 200B ஜெட்விமானம் உண்டு. இதில் அதிபர் பயணிக்கும்போது அது ஏர்போர்ஸ் ஒன் என்று கருதப்படுகிறது. நடுவானில் எரிபொருள் நிரப்பிக்கொள்ளும் வசதியுடைய இந்த விமானத்தில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்க முடியும். எந்த ஒரு நெருக்கடி நேரத்திலும் தகவல் ஏற்படுத்திக்கொள்ளும் அதி நவீன தகவல் தொடர்பு வசதிகள், ஏவுகணைகளில் தாக்குதலில் சிக்காத வசதி கொண்ட அதிபர் பயணிக்கும் விமானத்தில் உள்ளன.

அதே போல் பிரத்யேக ஹெலிக்காப்டரில் அவர் பயணிக்கும்போது அது மரைன் ஒன் என அழைக்கப்படுகிறது. அதிபர் பயணிக்கும்போது ஐந்து ஹெலிகாப்டர்கள் ஒரு சேர பறந்து அவ்வப்போது இடம் மாறி மாறி பறக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக இப்படிச் செய்கிறார்கள்.அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாக்க அமெரிக்காவில் இரகசிய சேவை இயங்குகிறது. தாங்கள் காக்கும் நபர் மற்றும் இடங்களுக்குத் தனியாக ரகசிய குறியீடு பெயர் அளிக்கப்படுகிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் அது தெளிவான தகவல் தொடர்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

அதிபர் ஓய்வுபெற்ற பிறகு, ஓய்வூதியம், அலுவலகம் மற்றும் பணியாளர்கள் எனப் பல சலுகைகள் உண்டு. அதிபராக இருந்தபோது கிடைத்த வசதிகள் சில ஓய்வு காலத்திலும் கிடைக்கும்.

You'r reading அமெரிக்க அதிபருக்கு என்ன வசதிகள் உண்டு தெரியுமா ? Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை