கொரோனா நோய்த் தொற்று, உடல்நலம் பாதிப்புடன் வேறு பல பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமான பொருளாதார இழப்பினால் பல நிறுவனங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்தன. அப்படி வேலையிழந்தவர்களைக் குறி வைத்து மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் அமர்நாத்.
பொறியியல் பட்டதாரியான இவர், பொது முடக்கக் காலத்தில் வேலையை இழந்தார். வேறு வேலை தேடுவதற்காகத் தன்னை பற்றிய விவரங்களை வேலைவாய்ப்பு இணையதளங்களில் பதிவு செய்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் தொலைப்பேசி மூலம் அமர்நாத்தைத் தொடர்பு கொண்ட ஒருவர், தம்மைப் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார். பணிக்கான தேர்வில் அமர்நாத்தின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக ரூ.20,500/- வழங்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த நபர் குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரில் தனக்கு வேலைக்கான ஆணை மின்னஞ்சல் வந்திருந்ததால் அமர்நாத் அவர் கூறிய தொகையை ஜிபே மூலம் அனுப்பியுள்ளார். அவர் தொகையை அனுப்பியதும், வேலைக்கான ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்னொரு மின்னஞ்சல் வந்துள்ளது. தொடர்ந்து அந்த நபரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது மொபைல் போன் அணைத்துவைக்கப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அமர்நாத் சென்னை அடையாறு சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
அமர்நாத் கொடுத்த மொபைல் எண்ணை வைத்து சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பிரபு (வயது 31), அம்பத்தூரைச் சேர்ந்த சாலொமோன் (வயது 29), அயனாவரத்தைச் சேர்ந்த யுவராஜ் (வயது 30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மெப்ஸ் பகுதியிலுள்ள நிறுவனம் ஒன்றில் முன்பு பணியாற்றிய பிரபு இதுபோன்று போலி வேலை ஆணைகளை வழங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் ஏற்கனவே சிறை சென்றுள்ளார். சிறையில் பழக்கமான பிக்பாக்கெட் சாலொமோனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மோசடியாக நிதி நிறுவனம் ஒன்றைப் பதிவு செய்த பிரபு, வேலைவாய்ப்பு தளங்களிலிருந்து வேலை தேடுவோரின் விவரங்களைப் பெற்றுள்ளார். டாஸ்மாக் கடைகளுக்குச் செல்லும் சாலொமோன் அங்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் பேச்சுக் கொடுத்து முடங்கியிருக்கும் வங்கிக் கணக்கு எண் விவரங்களை ரூ.5000/- விலைபேசி வாங்கியுள்ளார். இன்னொருவரான யுவராஜ், அநேகருடைய ஆதார் அட்டை நகல்களைப் பெற்றுள்ளார்.
ஆதார் அட்டைகளைக் கொண்டு புதிய சிம் வாங்கி அவற்றை மோசடி அழைப்புகளை விடுக்கப் பிரபு பயன்படுத்தியுள்ளார். மோசடியில் ஏமாறுபவர்களை தங்கள் வசமுள்ள வங்கி கணக்கில் பணம் செலுத்துமாறு கூறி பணத்தைப் பெற்றுள்ளனர். கொரோனா பாதித்த ஆறு மாதங்களில் 300 பேரை ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.ஏற்கனவே பல ஆண்டுகளாக இதே மோசடியைச் செய்து வந்துள்ள பிரபுவிடம் ஏமாந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.