பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டால் குற்றம் கிடையாது, பலாத்காரத்திற்கு மரண தண்டனை, 21வயது ஆனால் மது அருந்தலாம் இப்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் பல புதிய சட்டத் திருத்தங்கள் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் கிரிமினல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இதேபோல அமீரக நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டினரும் பல சிவில் சட்ட சிக்கல்கள் மூலம் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானித்துள்ளது. இந்த புதிய சட்டத் திருத்தத்தில் பெண்கள் பாதுகாப்பு, திருமணம், விவாகரத்து, பாலியல் வன்முறை, பலாத்காரம் கவுரவ கொலை ஆகியவற்றுக்கான தண்டனையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அமீரக நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டினரின் வாரிசு உரிமை, சொத்துக்களை கைமாற்றம் செய்வது மற்றும் விற்பனை ஆகியவற்றிலும் இருந்த நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டால் தண்டனை கிடையாது. ஆனால் மைனர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இதேபோல் பலாத்காரத்திற்கும் மரண தண்டனை விதிக்கப்படும். இந்த புதிய சட்டத் திருத்தத்தில் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கவுரவ கொலைகள் கொலை குற்றமாகவே கருதப்படும். 21 வயதுக்கு குறைவானவர்கள் மது வாங்குவதும், விற்பனை செய்வதும், குடிப்பதும் தண்டனைக்குரிய குற்றங்களாகும். 21 வயதுக்கு மேல் ஆனவர்கள் மது வாங்குவதோ, அருந்துவதோ தவறில்லை.
மேலும் பொது இடங்களில் முத்தம் கொடுப்பது, பொதுமக்களிடம் மோசமாக நடந்து கொள்வது மற்றும் தகராறில் ஈடுபடுவது ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாகும். மேலும் அமீரக நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டினர் மரணமடைந்தால் வாரிசு சான்றிதழ் பெறுவது சொத்துக்களை வாரிசுகளுக்கு கொடுப்பது ஆகியவற்றுக்கு அவரவர்களது சொந்த நாட்டில் என்ன சட்டம் பின்பற்றப்படுகிறதோ அதே சட்டத்தை இங்கும் பின்பற்றலாம். இந்த புதிய சட்ட திருத்தங்களுக்கு அமீரக தலைவர் ஷேக் கலீபா பின் செய்யது அல் நஹ்யான் அங்கீகாரம் அளித்துள்ளார்.