முஸ்லிம் இளம்பெண்ணை பிரான்ஸ் போலீஸ்காரர் கொடூரமாக தாக்கும் வீடியோ உண்மையா?

by Nishanth, Nov 8, 2020, 13:38 PM IST

பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் ஒரு முஸ்லிம் இளம்பெண்ணை பிரான்ஸ் போலீசார் கொடூரமாக தாக்குவதாக கூறி சமூக இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆனால் அது உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது. பிரான்சில் சமீபத்தில் முகம்மது நபியின் கார்ட்டூனை பயன்படுத்தியதாக கூறி ஒரு பள்ளி ஆசிரியர் பட்டப்பகலில் மாணவர்கள் முன்னிலையில் பள்ளிக்கு அருகே வைத்து கொடூரமாக கழுத்தை அறுத்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் பிரான்சில் பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து பிரான்சில் உள்ள முஸ்லீம் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் பிரான்சிலுள்ள நைஸ் நகரத்தில் ஒரு சர்ச்சின் அருகே தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவர் 3 பேரை குத்திக் கொன்ற சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில், ஒரு போலீஸ்காரர் கருப்பு உடை அணிந்த ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கும் காட்சிகள் இருந்தன. இந்த சம்பவம் பிரான்சில் நடைபெற்றதாகவும், ஒரு முஸ்லிம் பெண்ணை போலீஸ்காரர் தாக்கும் கொடுமையை பாருங்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது. அந்த சம்பவம் பிரான்சில் நடந்தது அல்ல. அது கடந்த இரு வருடங்களுக்கு முன் கனடா நாட்டில் நடந்த சம்பவமாகும்.கனடாவில் உள்ள கெல்கரி என்ற நகரத்தில் கடந்த 2017ல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது.இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரவு 11 மணியளவில் வெளியே நடமாடிய ஒரு இளம்பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் போலீசார் விசாரித்தபோது தனது உண்மையான பெயரைக் கூறாமல் தங்கையின் பெயரைக் கூறினார். அது பொய் என தெரியவந்ததை தொடர்ந்து அந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் போட்டோ எடுக்க முயற்சித்த போது தான் அந்த சம்பவம் நடந்தது. போட்டோ எடுக்க எதிர்ப்பு தெரிவித்த அந்த இளம்பெண் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஒரு போலீஸ்காரர் அந்த இளம்பெண்ணை பிடித்து கீழே தள்ளினார். இந்த சம்பவத்தில் அந்த இளம்பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கனடா நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. அந்த பெண் முஸ்லீம் அல்ல முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் அல்ல. அவரது பெயர் தாலியா என்பதாகும். தலையில் கருப்பு துணியை கட்டி இருந்தார். அதை வைத்துத் தான் அவர் முஸ்லிம் பெண் என்று கூறி சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது.

You'r reading முஸ்லிம் இளம்பெண்ணை பிரான்ஸ் போலீஸ்காரர் கொடூரமாக தாக்கும் வீடியோ உண்மையா? Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை