ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவற்றை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதனால், காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் பாகிஸ்தான் விஷமத்தனமான வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசப் பிரச்னையாக்க பாகிஸ்தான் முயன்றது. மேலும், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்களை செய்தது. ஆனால், உலக நாடுகள் அதை பொருட்படுத்தவில்லை. காஷ்மீர் பிரச்னை, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்ற இந்திய நிலைப்பாட்டில் தலையிட எந்த நாடும் விரும்பவில்லை.
இந்நிலையில் தற்போது, இந்தியா தீவிரவாத தாக்குதல்களை ஊக்குவிப்பதாக புதிய குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறது பாகிஸ்தான் அரசு. பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா முகமது குரேஷி, இது தொடர்பாக பேசுகையில், ``ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் இந்திய உளவு அமைப்புகள், பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வருகின்றன. பாகிஸ்தானுக்கு எதிராக தீவிரவாத செயல்பாடுகளை ஊக்குவிக்க, இந்திய நிலம் பயன்பட இந்திய அரசு அனுமதிக்கிறது. அண்டை நாடுகளில் இருந்து பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எங்களிடம் மலையளவு ஆதாரங்கள் உள்ளன. அதை ஐநாவில் ஒப்படைப்போம்" எனக் கூறியுள்ளார்.