கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பை நகரைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தியாவின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் முக்கிய நகரான மும்பையில் ஒரே நேரத்தில் பல இடங்களில் தீவிரவாதிகள் மூன்று நாட்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.
கடல் வழியே மும்பைக்குள் நுழைந்த பத்து தீவிரவாதிகளால் 166 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். சர்வதேச தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் இதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், வழக்கில் எந்தவொரு நகர்தலும் இல்லை.
காரணம், பாகிஸ்தான் தரப்பிலிருந்து எந்தவொரு ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் என்பதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது. எனினும் முக்கியமான குற்றவாளிகளுக்கு தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருகிறது பாகிஸ்தான். இன்று மும்பை தாக்குதல் நடந்த தினம். இன்றைய தினத்தில் இந்திய வெளியுறவு அதிகாரிகள், மும்பை தாக்குதல் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத், லஷ்கர் இ தொய்பா ஜிஹாத் பிரிவின் தலைவருமான ஜாகி-உர்-ரெஹ்மான் லக்வி இருவரும் தங்களது வீடுகளில் பாதுகாப்பாக உள்ளனர். இவர்கள் சிறையில் இருப்பதாக பாகிஸ்தான் சொல்வது பொய். இருவரும் சமீபத்தில் சந்தித்து ஜிகாத்துக்கு நிதி திரட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இருவரையும் பாகிஸ்தான் அரசு பாதுகாக்க பல முயற்சிகளை செய்து வருகிறது என்று கூறியுள்ளது.