பைசர் பயோ என்டெக் கொரோனா தடுப்பூசிக்குப் பிரிட்டனில் அனுமதி..

by எஸ். எம். கணபதி, Dec 2, 2020, 13:55 PM IST

பைசர்- பயோ என்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்த வாரம் முதல் அந்நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட உள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. அமெரிக்காவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பாதித்திருக்கிறது. இந்தியாவில் 95 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நோய் பாதித்திருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனம், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவை கொரோனா தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்துள்ளன.

தடுப்பு மருந்துகளை மனித உடலில் செலுத்திப் பரிசோதிக்கும் முக்கிய கட்டத்தில் ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் 2021ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசின் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.இதற்கிடையே, பைசர் - பயோ என்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி மருந்தை இங்கிலாந்து அரசு அங்கீகரித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்றவை இந்த தடுப்பூசி மருந்தை இன்னும் அனுமதிக்காத நிலையில், முதல் நாடாக இங்கிலாந்து அரசு அனுமதித்திருக்கிறது. இந்த மருந்தை அடுத்த வாரம் முதல் இங்கிலாந்து மக்களுக்குப் பயன்படுத்தப் போவதாகவும் அந்நாட்டு அரசு தனது அறிவிப்பில் தெரிவித்திருக்கிறது.

பைசர்- பயோ என்டெக் நிறுவனத்தின் கொரேனா தடுப்பு மருந்து, மனிதர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்டப் பரிசோதனைகளில் 95 சதவீதம் அளவுக்குப் பலன் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இந்த மருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டுக்கு முதலில் தடுப்பூசி மருந்துகள் சப்ளை செய்யப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அந்த மருந்தைப் பயன்படுத்த முடிவு செய்யலாம் எனத் தெரிகிறது.

More World News


அண்மைய செய்திகள்