பிரிட்டனில் இருந்து வந்தவருக்கு கொரோனா.. புதிய வைரஸ் பாதிப்பு?

by எஸ். எம். கணபதி, Dec 22, 2020, 14:31 PM IST

இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதாகச் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது. இதையடுத்து, லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களுக்கு இன்றிரவு(டிச.22) முதல் 31ம் தேதி வரை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, இங்கிலாந்தில் இருந்து நேற்று சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. அதே போல், பெங்களூருவுக்கு வந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பயணிகளைப் பரிசோதிக்கும் செயல்பாடுகளைத் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது. லண்டனில் இருந்து சென்னைக்கு நேற்று 3 விமானங்கள் வந்துள்ளன.

டெல்லி வழியாகச் சென்னை வந்த விமானத்தில் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொரோனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது சளி மாதிரி புனேவில் உள்ள தேசிய வைரஸ் நோய் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்குப் பரிசோதித்த பின்புதான், அவருக்கு ஏற்கனவே உள்ள கொரோனாவா அல்லது புதிய வகை வைரஸ் பாதிப்பா என்று தெரியும். இங்கிலாந்தில் இருந்து கடந்த 10 நாட்களில் தமிழகத்திற்கு வந்தவர்களுக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்படும். வெளிநாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.பெங்களூருவில் முதல்வர் எடியூரப்பா கூறுகையில், இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோரை பரிசோதனை செய்கிறோம். மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

You'r reading பிரிட்டனில் இருந்து வந்தவருக்கு கொரோனா.. புதிய வைரஸ் பாதிப்பு? Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை