அமைச்சர்கள் மீது 2வது ஊழல் புகார் பட்டியல்.. மு.க.ஸ்டாலின் பேட்டி..

by எஸ். எம். கணபதி, Dec 22, 2020, 14:35 PM IST

அதிமுக அமைச்சர்கள் மீது இன்னும் பல ஊழல் புகார்கள் உள்ளன. அவற்றுக்கான ஆதாரங்களைச் சேகரித்து விரைவில் 2வது பட்டியலை கவர்னரிடம் அளிப்போம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இன்று கவர்னரை சந்தித்து, அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளித்தனர். பின்னர் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது உலக வங்கி நிதி ஊழல், நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்றிருக்கும் ஊழல், மத்திய அரசு வழங்கிய அரிசியை வெளிச்சந்தையில் விற்றதில் மாபெரும் ஊழல், வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவித்தது ஆகியவை குறித்து ஆதாரங்களுடன் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளோம்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு குறித்து ஏற்கனவே கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது ஊழல் புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் கொடுத்திருந்தோம். அதன் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், அந்தப் புகார்கள் மீதான ஆதாரங்களை ஒன்று திரட்டி கவர்னரிடம் கொடுத்திருக்கிறோம். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் - லஞ்ச ஊழல் தடுப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

முதலமைச்சர் வருமானத்திற்கு மீறி சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். அதற்குரிய ஆதாரங்களையும் நாங்கள் கொடுத்திருக்கிறோம்.2018-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17ஏ-வின் கீழ் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. எனவே, லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு கவர்னர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். விசாரணைக்குத் தேவையான ஆவணங்களையெல்லாம் நாங்கள் கொடுத்திருக்கிறோம்.இன்னும் பல அமைச்சர்களின் ஊழல்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து வழக்கறிஞர்கள் குழுவிடம் ஒப்படைத்துள்ளோம். இன்னும் சில ஆதாரங்கள் கிடைக்க வேண்டியுள்ளது. அந்த ஆதாரங்கள் கிடைத்தவுடன், நிச்சயமாக மீண்டும் 2வது பட்டியலை கவர்னரிடம் கொடுக்கப் போகிறோம்.

நாங்கள் அளித்த புகார்களில் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கவர்னர் சொல்லியிருக்கிறார். இந்த ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் அளித்திருக்கிறோம். பல வழக்குகளும் போட்டிருக்கிறோம். சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென ஐகோர்ட் உத்தரவு போட்டிருக்கிறது. அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டே வாங்கியிருப்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

You'r reading அமைச்சர்கள் மீது 2வது ஊழல் புகார் பட்டியல்.. மு.க.ஸ்டாலின் பேட்டி.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை