பிரைவசி சினிமா தியேட்டர் புது திட்டம் அமல்.. ரூ 3999 செலுத்தினால் 25 பேர் படம் பார்க்கலாம்..

by Chandru, Dec 22, 2020, 14:37 PM IST

கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் கடந்த 7 மாதமாக மூடிக் கிடந்தது. இதனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தியேட்டர் அதிபர்கள் மற்றும் திரையுலகினர் சார்பில் தியேட்டர்கள் திறக்க அனுமதி தரக் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு முன்னதாக தியேட்டர்கள் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியது. 50 சதவீத டிக்கெட் என்றதும் பெரிய படங்கள் வெளியாகாமல் நிறுத்தி வைத்தனர். பட்ஜெட் படங்கள் மற்றும் சந்தானம் போன்றவர்கள் நடித்த பிஸ்கோத் மற்றும் தேன், கொம்பு போன்ற சில படங்கள் வெளியாகின.

கொரோனா அச்சம் காரணமாக தியேட்டருக்கு கூட்டம் வருவது குறைந்திருக்கிறது. கூட்டத்தை தியேட்டருக்கு அழைத்து வர பெரிய படங்களை எதிர்பார்த்து தியேட்டர் அதிபர்கள் காத்திருக்கின்றனர். பொங்கலுக்கு விஜய் நடித்துள்ள மாஸ்டர், சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் ரிலீஸ் பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை.இந்நிலையில் தியேட்டர் அதிபர்கள் புதிய திட்டங்கள் உருவாக்கி வருகின்றனர். பிரைவசி தியேட்டர்கள் அமைக்கிறார்கள். அதில் குறைந்த எண்ணிக்கையிலான நண்பர்கள் குறிப்பிட்ட பணம் கட்டினால் படம் பார்க்க முடியும் கோவையில் இந்த திட்டம் அமலாகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தற்போது திரையரங்கு செயல்பட்டு வந்தாலும் , மக்களிடையே நிலவும் அச்சம் , உச்ச நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் இல்லை என்பன போன்ற காரணங்களால் தற்போது வரை தியேட்டர்களில் அதிக அளவிலான மக்கள் கூட்டம் வருவதில்லை. இச்சூழலில் தான் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் நடத்தும் ஸ்ரீ சக்தி சினிமாஸ் தியேட்டரில் ப்ரைவசி தியேட்டர் கொண்டு வரப்பட்டுள்ளது.இதுபற்றி அவர் கூறியதாவது:மல்டிப்ளக்ஸ் தியேட்டர் என்பதால் இருக்கக் கூடிய 8 ஸ்க்ரீனில் 150 பேர் மட்டுமே அமரக்கூடிய வசதி கொண்ட ஒரு ஸ்க்ரீனை இந்த ப்ரைவசி தியேட்டருக்காக ஒதுக்கியுள்ளனர். 3999 ரூபாய் கட்டண மாக செலுத்தினால் 25 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவர். அதற்கு மேல் வரும் ஒவ்வொரு நபருக்கும் 120 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் .

பிறந்தநாள் போன்ற கொண்டாட கூடிய அனைத்து வகைகளுக்கும் ப்ரைவசி தியேட்டர் கொடுக்கப்படும். அப்போது ஓடிக்கொண்டிருக்கும் எந்த படத்தை விரும்புகிறார்களோ அந்த படம் திரையிடப்படும் கொரோனா அச்சம் இன்னும் முழுமையாக மக்கள் மத்தியில் இருந்து விலகாத இந்த காலகட்டத்தில், அச்சம் இல்லாமல் தனியாகவோ , குடும்ப உறுப்பினர்களோ மட்டுமே பார்க்கக் கூடிய இந்த ப்ரைவசி தியேட்டர் நிச்சயம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும். இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் கூறினார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை