ஃபேஸ்புக் நிறுவனம் தன் மீதுள்ள கலங்கத்தைத் துடைத்து பயன்பாட்டாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல வேண்டும் என சீனாவின் முன்னணி தொழிலதிபரான ஜாக் மா கோரிக்கைவிடுத்துள்ளார்.
ஃபேஸ்புக் சமூக வலைதளப் பக்கத்தின் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபனமானது. இதையடுத்து அமெரிக்காவில் இதுதொடர்பான விவாதங்கள் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ-வான மார்க் சக்கர்பெர்க்குக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க் சக்கர்பெர்க் சர்வதேச ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களிடம் மன்னிப்புக் கேட்பதாக அறிவித்தார். மேலும் விரைவில் அமெரிக்கக் காங்கிரஸ் சபை முன்பும் ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கும் குழப்பங்களுக்கும் முழு பொறுப்பு எடுத்துக்கொண்டு மன்னிப்பு கேட்க உள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த தொழில் விழா ஒன்றில் சீனாவின் முன்னணி பணக்காரகளில் ஒருவரும் அலிபாப நிறுவனத்தின் தலைவருமான ஜாக் மா ஃபேஸ்புக் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "ஃபேஸ்புக் நிறுவனம் எதிர்பாரா வளர்ச்சியை அடைந்தது. அதே வேளையில் தற்போது யாரும் எதிர்பாரா பிரச்னைகளையும் சந்தித்துள்ளது. இது தீர்வுக்கான நேரம். விரைவில் மார்க் இதற்கான தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும்" என கூறியுள்ளார்.