வாஷிங்டன்: புதிய அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடனின் இணை அட்டர்னி ஜெனரலாக அமெரிக்கவாழ் இந்தியரான வனிதா குப்தா நியமினம் செய்யப்படவுள்ளார். கடந்த நவ. 3ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது அதிபர் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். எனினும், இந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி வரும் டிரம்ப், தனது தோல்வியை ஏற்க மறுத்து வந்தார். இந்நிலையில் நேற்று, புதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
இதற்கிடையே, வரும் 20ம் தேதி புதிய அதிபராக ஜோ பிடன் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் இணை அட்டர்னி ஜெனரலாக அமெரிக்கவாழ் இந்தியரான வனிதா குப்தாவை அமெரிக்க அதிபராக பதவியேற்கும் ஜோ பைடன் தேர்வு செய்யவுள்ளார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில், தற்போதைய அதிபராக பதவியேற்கும் பைடன் துணைத் தலைவராக இருந்தபோது வனிதா குப்தா முதன்மை துணை உதவி அட்டர்னி ஜெனரலாகவும், நீதித்துறையில் சிவில் உரிமைகள் பிரிவின் தலைவராகவும் பணியாற்றினார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உயர்ந்த பதவிகளின் ஒன்றான இப்பதவியை அலங்கரிக்கும் முதல் பெண் வனிதா குப்தா என்பது குறிப்பிடத்தக்கது. சட்டப்படிப்பு முடித்த வனிதா குப்தா, டெக்சாஸ் நகரத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறாக தண்டிக்கப்பட்ட 38 பேரை விடுதலை செய்யக்கோரி வாதாடி அதில் வெற்றிபெற்றார். வனிதா முயற்சியாள் அவர்களுக்கு இழப்பீடாக 6 மில்லியன் டாலரும் கிடைத்தது. தண்டிக்கப்பட்டவர்கள் பெரும்பாலோர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தான். இந்த வழக்கின் மூலம் வனிதா குப்தா அமெரிக்காவில் புகழ்பெற்ற நபராக திகழ்ந்தார். இந்நிலையில், அவருக்கு அமெரிக்காவின் உயர்ந்த பதவி கிடைத்துள்ளது.