லிங்கன் நினைவிடத்தில் புதிய அதிபர் ஜோ பிடன் முதல் உரை..

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் இன்று(ஜன.20) பதவியேற்கிறார். துணை அதிபராகக் கமலா ஹாரிஸ் பதவியேற்கிறார்.

by எஸ். எம். கணபதி, Jan 20, 2021, 09:33 AM IST

அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப்பை தோற்கடித்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஜன.20ம் தேதி அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக, நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றியை அறிவிக்காமல் தடுக்கும் வகையில் டிரம்ப் ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். டிரம்ப் தனது தோல்வியை மறுத்துப் பேசியதுடன், ஆதரவாளர்களைப் போராடுமாறு தூண்டி விட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்துதான் கலவரம் வெடித்தது. நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் வன்முறையாளர்கள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். கலவரத்தில் 5 பேர் பலியாகினர்.இதன் காரணமாக, வெள்ளை மாளிகை, நாடாளுமன்றக் கட்டிடம்(capitol), அரசு அலுவலகங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவைச் சீர்குலைக்கும் முயற்சிகளைத் தடுப்பதற்காக 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 25 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதிய அதிபராகப் பொறுப்பேற்கும் ஜோ பிடன் தனது மனைவி ஜில் பிடனுடன் தலைநகர் வாஷிங்டனுக்கு நேற்றிரவு(ஜன.19) வந்தார். அவரும் துணை அதிபராகும் கமலா ஹாரிசும், முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் நினைவிடத்திற்கு வந்தனர். அங்கு அதிபர் ஜோ பிடன் தனது முதல் உரையை நிகழ்த்தினார். லிங்கன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு, கொரோனாவால் உயிரிழந்தவர்கள் மற்றும் மறைந்த வீரர்களை நினைவு கூர்ந்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், சில நினைவுகள் மிகவும் துயரமாக இருக்கும். ஆனாலும், அவற்றை நாம் நினைவு கூறும் போதுதான் ஆறுதல் பெற முடியும். நாடு ஆறுதலை பெற வேண்டிய தருணம் இது என்று குறிப்பிட்டார்.

You'r reading லிங்கன் நினைவிடத்தில் புதிய அதிபர் ஜோ பிடன் முதல் உரை.. Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை