கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் காமராஜ் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று பாதித்து ஜன.5ம் தேதியன்று, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவருக்குக் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் நேற்று(ஜன.19) ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அங்கு அவரை பரிசோதிக்க வந்த எம்.ஜி.எம் மருத்துவமனை சீனியர் டாக்டர்கள் அவரை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றக் கூறினர். அதன்படி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர், எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்றிரவு 9.45 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து டாக்டர்களிடம் காமராஜின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தனர். இந்நிலையில், காமராஜின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.