உலகில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 21.50 லட்சத்தை நெருங்குகிறது. நோய் பாதித்தவர்களின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்ட போதிலும் அதன் தீவிரம் இன்னும் குறையவில்லை. அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவது அடுத்த பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இதுவரை உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டிவிட்டது. புதிதாக 4 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவியுள்ளது.
நோய் பாதித்து இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கி விட்டது. இதற்கிடையே உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7.22 கோடியை தாண்டியுள்ளது. உலகில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகள் தான் முதல் மூன்று இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்தை தாண்டிவிட்டது. தற்போது இந்தியாவில் 1.84 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே மூன்று லட்சத்தை தாண்டிவிட்டது. இதுவரை 1.5 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 2 கோடியே 58 லட்சம் பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அமெரிக்காவில் 4.31 லட்சம் பேர் மரணமடைந்தனர். பிரேசிலில் இதுவரை 88 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு 2.17 லட்சம் பேர் மரணமடைந்தனர். இதுவரை 77 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். பிரேசிலை போலவே இங்கிலாந்திலும் நிலைமை மிக மோசமாகவே தொடர்கிறது. இந்தியாவில் தற்போது படிப்படியாக நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 13,023 பேர் நோயால் பாதிக்கப்பட்டனர். சிகிச்சையில் இருந்த 131 பேர் மரணமடைந்தனர். தற்போது கேரளாவில் தான் இந்தியாவிலேயே நோயாளிகள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படி கேரள அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.