கேரளாவிலும் ஒரு குஜராத் பாஜக தலைவரின் பேச்சுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு

by Nishanth, Jan 26, 2021, 09:11 AM IST

திருவனந்தபுரத்தில் உள்ள நேமம் சட்டமன்ற தொகுதி கேரளாவில் உள்ள ஒரு குஜராத் என்று பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் கூறியதற்கு காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுடன் கேரளாவுக்கும் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கேரளாவில் பாஜக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் இப்போதே முழுவீச்சில் ஈடுபடத் தொடங்கி விட்டன. அனைத்து கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கேரளாவில் மொத்தம் 140 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2016ம் ஆண்டுக்கு முன்பு வரை பாஜகவுக்கு கேரள சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நேமம் தொகுதியை முதன்முதலாக பாஜக கைப்பற்றியது. இந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் ஓ.ராஜகோபால், சிபிஎம் வேட்பாளர் சிவன் குட்டியை தோற்கடித்தார். இதன் மூலம் கேரளாவில் பாஜக முதல் வெற்றியை பெற்றது. இதன் பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக இங்கு அதிக வாக்குகளை பெற்றது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த தொகுதிக்கு உட்பட்ட சில வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றது. இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜ்யசபா எம்பியும், மலையாள முன்னணி நடிகருமான சுரேஷ் கோபி, இன்னொரு நடிகரான கிருஷ்ண குமார், பாஜக முன்னாள் தலைவரும் முன்னாள் மிசோரம் மாநில கவர்னருமான கும்மனம் ராஜசேகரன் உட்பட பல பாஜக தலைவர்கள் இந்த தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் கூறுகையில், நேமம் தொகுதி கேரளாவின் குஜராத் ஆகும். இந்த தொகுதியில் வரும் தேர்தலில் பாஜக கண்டிப்பாக மீண்டும் வெற்றி பெறும். வாய்ப்பு கிடைத்தால் இந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று கூறினார். நேமம் தொகுதியை கேரளாவின் குஜராத் என்று கும்மனம் ராஜசேகரன் கூறியதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நேமம் தொகுதியை கேரளாவின் குஜராத் என்று பாஜக கூறியதன் மூலம் அந்த தொகுதி மக்களை அவர் அவமானப்படுத்தி விட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறினார். குஜராத் மாநிலம் மனித விரோத செயல்பாடுகள் நடக்கும் மாநிலம் ஆகும் என்று அவர் மேலும் கூறினார். இதேபோல இடது முன்னணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், முஸ்லிம் லீக் தலைவர் குஞ்சாலிக் குட்டி, காங்கிரஸ் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் அசன் மற்றும் பலர் பாஜகவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

You'r reading கேரளாவிலும் ஒரு குஜராத் பாஜக தலைவரின் பேச்சுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை