அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். முன்னாள் அதிபர் டிரம்புக்கு நெருக்கமாக இருந்த பல அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இதேபோல அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவிலும் பல மாற்றங்களை ஏற்படுத்த ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.
இதன்படி முதல் மாற்றமாக நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜோ பைடனின் அதிபர் ஏஜென்சி ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருந்தார். கடந்த 2005 முதல் 2020 வரை ராணுவ பகுப்பாய்வு மற்றும் அறிவியல், தொழில்நுட்ப மையத்தின் (எஸ்டிபிஐ)ஆராய்ச்சி உறுப்பினராக இருந்தார்.
பவ்யா லால் எஸ்டிபிஐயில் சேர்வதற்கு முன் அறிவியல் தொழில்நுட்ப கொள்கை ஆராய்ச்சி ஆலோசனை நிறுவன அதிபராக இருந்தார். கேம்பிரிட்ஜை மையமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச கொள்கை ஆய்வு ஆலோசனை நிறுவனத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய இயக்குனராகவும் இவர் பணிபுரிந்துள்ளார். செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பவ்யா லாலுக்கு பொறியியல் மற்றும் விண்வெளி ஆய்வு தொழில்நுட்பத்தில் அதிக அனுபவம் உண்டு என்று நாசா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க விண்வெளித் துறைக்கு இவர் பல அரிய சேவைகளைச் செய்துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.