தடுமாறும் இஸ்ரேல் அரசு – பெஞ்சமின் நேட்டன்யாஹூக்கு 28 நாள் கெடு விதிப்பு!

by Sasitharan, Apr 7, 2021, 08:52 AM IST

இஸ்ரேலைப் பொறுத்தவரை கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நிலையான அரசு அமைக்க முடியாத சூழலில் இஸ்ரேல் தடுமாறி வருகிறது. இந்த சூழலில் தான் கடந்த மாதம் 4-வது முறையாக பொதுத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு சாதகமாக அமைந்தது.

பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி 59 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. இருப்பினும், இஸ்ரேலில் ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை. ஆனால், லிக்குட் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அந்த கட்சிக்கு மட்டுமில்லை. அதேபோல் நேட்டன்யாஹூவுக்கு எதிராக போட்டியிட்ட எதிர்க்கட்சி கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

இந்த நிலையில் ஆட்சி அமைக்க வருமாறு பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு அந்த நாட்டின் அதிபர் ருவன் ரிவ்லின் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் புதிய அரசை அமைப்பதற்கு நேட்டன்யாஹூவுக்கு 28 நாள் காலக்கெடுவையும் விதித்துள்ளார்.

இந்த காலக்கெடுவுக்குள் நேட்டன்யாஹூ ஆட்சியமைக்க தவறும்பட்சத்தில், நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை உள்ளது என உரிமை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஆட்சி அமைக்க அதிபர் ருவன் ரிவ்லின் அழைப்பார். அவரது அழைப்பை ஏற்று அப்படி யாரும் உரிமை கோரவில்லை என்றால் மீண்டும் பொது தேர்தலை நடத்த அதிபர் ருவன் ரிவ்லின் உத்தரவிடுவார்.

இந்த 28 நாள் காலக்கெடுவுக்கு பிறகு தான் இஸ்ரேலின் ஆட்சி அதிகாரம் குறித்து நிலையான முடிவு வெளியாகும்.

You'r reading தடுமாறும் இஸ்ரேல் அரசு – பெஞ்சமின் நேட்டன்யாஹூக்கு 28 நாள் கெடு விதிப்பு! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை