உலக கோடீசுவரர்கள் பட்டியலை அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 35-வது ஆண்டிற்கான பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
நீண்ட பட்டியலில் 2,755 பெரும் பணக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டை விட 660 அதிகம். இப்பட்டியலில், அமெரிக்காவை சேர்ந்த 724 பேரும், சீனாவை சேர்ந்த 698 பேரும், இந்தியாவை சேர்ந்த 140 பேரும் இடம்பெற்றுள்ளனர். அதிகமான பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ஆசியா கண்டத்தின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெயரை மீண்டும் கைப்பற்றி உள்ளார்.
ஓராண்டுக்கு முன்பு, இந்த அந்தஸ்தை சீனாவை சேர்ந்த ஜாக் மா பெற்றிருந்தார். அவரை வீழ்த்தி முகேஷ் அம்பானி இந்த அந்தஸ்தை பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு 8 ஆயிரத்து 450 கோடி டாலர் (ரூ.6 லட்சத்து 8 ஆயிரத்து 400 கோடி) ஆகும். உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 10-வது இடத்தில் உள்ளார். இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி 2-வது இடத்திலும், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இதற்கிடையே, நேற்று வெளியான போர்ப்ஸ் பட்டியலில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு இடம்பெற்றிருந்தது. அது உலகின் இளம் வயது பணக்காரராக 18 வயதே ஆன இளைஞர் ஒருவர் இடம்பெற்றுள்ளது தான். அவர் பெயர் கெவின் டேவிட் லெஹ்மன். ஜெர்மனியை சேர்ந்த இவர் 3.3 பில்லியன் சொத்துக்களுடன் இந்த மதிப்பை பெற்றுள்ளார். 18 வயதில் இவர் எப்படி சொத்து சேர்த்தார் என எண்ணுகிறீர்களா. அதற்காக விடை அவரின் தந்தை தான். கெவினின் தந்தை வேறு யாரும் அல்ல, ஜெர்மனியின் மிகப்பெரிய மருந்துக்கடை சங்கிலி விற்பனை நிறுவனமான Dm-drogerie markt நிறுவனத்தை நிறுவியவர்.
இவர் சமீபத்தில் தனது நிறுவனத்தின் பாதி பங்குகளை கெவின் பெயருக்கு மாற்றினார். இதனால் அவர் 18 வயதில் உலகின் இளம் வயது பில்லியனராக மாறி இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக சீனாவின் 24 வயதை சேர்ந்த வாங் ஜெலாங், என்பவர் இருக்கிறார். அடுத்து நார்வேயைச் சேர்ந்த சகோதரிகள் இடம்பெற்றுள்ளனர்.