இந்தியாவிலேயே மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உச்சமடைந்து வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 59,907 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டும், 322 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில், மராட்டியத்தின் பன்வெல் மாநகராட்சி கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
பன்வெல் மாநகராட்சியை தொடர்ந்து புனே நகரில் தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளது என கூறப்படுகிறது. புனேயில் 109 மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பலர் தடுப்பூசி போட்டு கொள்ள முடியாமலேயே வீடு திரும்புவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் ட்விட் செய்துள்ளார். அதில், புனேயில் 391 மையங்களில் 55,539 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. ஆனால், தடுப்பூசி இருப்பு இல்லாத நிலையில், ஆயிரக்கணக்கானோர் தடுப்பூசி போடாமலேயே திரும்பி சென்றுள்ளனர்.
புனே நகரில் தடுப்பூசி பற்றாக்குறையால் 109 தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு உள்ளன. ஏனெனில் தடுப்பூசி கையிருப்பு இல்லை. பொருளாதார மீட்சிக்கும், கொரோனா தொற்று சங்கிலியை உடைக்கவும் மற்றும் உயிர்களை காக்க ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான தீர்மானத்தில் நாங்கள் தொடர்ந்து உள்ளோம் என தெரிவித்து உள்ளார்.
கொரோனா தடுப்பூசிகளை வழங்கி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் எங்களுக்கு உதவ வேண்டும் என்றும் சுலே கேட்டுக்கொண்டுள்ளார்