தகிக்கும் மியான்மர் வெடிக்கும் போராட்டம் – ஒரேநாளில் 82 அப்பாவி மக்கள் சுட்டுகொலை!

by Madhavan, Apr 12, 2021, 19:21 PM IST

மியான்மர் நாட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 82 பேர் பலியாகியுள்ளனர்.

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் ஆங்க்சாங்சூகி அரசாங்கம் கவிழக்கப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கலைத்தது ராணுவம். திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது மியான்மர் ராணுவம். இதற்கு காரணமாக கடந்த கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியிருக்கிறது. மேலும் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் ராணுவம் கைது செய்தது.

இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்து எழுந்துள்ளனர். போராட்ட களமாக மாறியிருக்கிறது மியான்மர். எங்கு பாத்தாலும் போராட்டம், மக்கள் மீதான ராணுவத்தின் அத்துமீறல் என அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ராணுவத்தின் எச்சரிக்கையையும் மீறி மக்கள் சாலைகளில் இறங்கி போராடி வருகிறார்கள். ஆனால் போராட்டங்களை ஒடுக்க ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தி வருகிறது. இதில், பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும் இதற்கெல்லாம் பயப்படாத மக்கள் சாலைளில் இறங்கி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மியான்மரில் ஒரே நாளில் 82 பேரை ராணுவம் சுட்டு கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாகோ நகரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் போராட்டங்கள் நடத்தினர். அவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியது.

இதில் ஒரே நாளில் 82 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி கடந்த மார்ச் மாதம் நடந்த போராட்டத்தில் 14-ந் தேதி யான்கூன் நகரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியது. இதில் ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு ஒரே நாளில் அதிகபட்சமாக பாகோ நகரில் 82 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இப்படியாக தொடர்கதையாக சென்றுகொண்டிருக்கிறது ராணுவத்தின் சர்வாதிகாரம்.


இதற்கிடையே மியான்மரில் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 614 ஆக உயர்ந்துள்ளதாக மியான்மர் அரசியல் கைதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 46 பேர் சிறுவர்கள் என்றும் அந்த அமைப்பு கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading தகிக்கும் மியான்மர் வெடிக்கும் போராட்டம் – ஒரேநாளில் 82 அப்பாவி மக்கள் சுட்டுகொலை! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை