அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதற்காக ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ரஷியா தலையிட்டு குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்புக்கு ஆதரவாகவும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் செயல்பட்டதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் ரஷியாவின் தலையீடு இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், அப்போதைய அதிபர் டிரம்புக்கு சாதகமான வகையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீது தவறான, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை, டிரம்ப் ஆதரவாளர்கள் மூலம் பரப்ப ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதேப்போல், கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவின் அரசுத்துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு ரஷியாவே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் இதற்கு பதிலடியாக ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் உள்ள ரஷிய தூதர்கள் 10 பேர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சா்வதேச அளவில் ஸ்திரத்தன்மையை குலைய செய்யும் ரஷியாவின் நடவடிக்கைகள் தொடா்ந்தால் அதற்கு அமெரிக்கா தகுந்த பதிலடி கொடுக்கும் என்பதை இந்த உத்தரவு உணர்த்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.