பாகிஸ்தானில், பிரான்ஸ் அதிபருக்கு எதிரான போராட்டம் பரவாமல் இருக்க சமூக வலைதளங்களை அந்நாட்டு அரசு முடக்கியது.
பிரான்ஸ் நாட்டில் சார்லி ஹேப்டோ பத்திரிக்கையில் குறிப்பிட்ட மதத்தின் கடவுளை அவமதிக்கும் வகையில் கேலிசித்திரம் வெளியிடப்பட்டதாக அண்மையில், சர்ச்சை ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் சார்லி ஹேப்டோ பத்திரிக்கைக்கு ஆதராகவும், கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்தார்.
இதையடுத்து, பிரான்ஸ் அதிபருக்கு எதிராக பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் போராட்டங்கள் வெடித்தது. இதற்கிடையில், பாகிஸ்தான் நாட்டில் தெஹ்ரிக் - இ - லப்பைக் பாகிஸ்தான் என்ற தீவிர வலதுசாரி அமைப்பு, பிரான்ஸ் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கியது. மேலும், சமூகவலைதளங்கள் மூலம் போராட்டங்களை பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச்சென்றது. வன்முறையாக மாறிய போராட்டத்தால், பல்வேறு பகுதிகளில் கடைகள், அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வன்முறையை கட்டுப்படுத்த முயன்ற 4 போலீசார் உயிரிழந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், வன்முறை சம்பவங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில் பாகிஸ்தானில், நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், டிக்டாக், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகிய அனைத்து சமூக வலைதளங்களையும் பாகிஸ்தான் அரசு முடக்கியது. பின்னர் இந்த தடை மாலை 5 மணிக்கு மேல் நீக்கப்பட்டது. இதனால் போராட்டங்கள் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டதாக அந்நாட்டு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.