அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் அமெரிக்கா அதிக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை கொண்டுள்ளது. அதிபர் ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் கொரோனா பாதிப்புகளை குறைக்க தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தினார். இதனால், அமெரிக்க மக்கள் தொகையில் 42 சதவீதத்தினர் இதுவரையில் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை எடுத்து கொண்டுள்ளனர். அவர்களில் 30 சதவீதம் பேர் முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளனர். இதனை அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், அந்த மையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி,
- அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம்.
- சிறு குழுக்களுடனான வெளிப்புற கூட்டங்களில் கூடும்பொழுது முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை.
- சிறு குழுக்களில் தடுப்பூசி போட்டவர்களோ அல்லது போடாதவர்களோ இருக்கிறார்கள் என்றாலும் கூட முக கவசம் அணிய தேவையில்லை.
பல்வேறு வீடுகளில் இருந்து வந்திருக்கும் நண்பர்களுடன், வெளிப்புற உணவு விடுதியில் ஒன்றாக உணவருந்தும்பொழுதும், முக கவசம் அணியாமல் இருப்பது முழு அளவில் தடுப்பூசி போட்டவர்களுக்கு பாதுகாப்புமிக்க ஒன்று என்றே எடுத்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காததால் பல்வேறு நாடுகளில் பலருக்கு இரண்டாவது, மூன்றாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.