அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான ஹெச்-1 பி விசாக்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் கடும் சரிவை சந்தித்துள்ளது.
குறிப்பாக, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்போஸிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் அமெரிக்கா, எல் அண்டு டி, டிசிஎஸ், டெக் மஹிந்திரா, மைண்ட் ட்ரீ போன்ற அனைத்துக்கும் சேர்த்து 2017-ம் நிதியாண்டில் 8,468 ஹெச்-1பி விசாக்களே கிடைத்துள்ளன. 2015-ம் ஆண்டில் 14,792 விசாக்கள் வழங்கப்பட்டது. இது 43 சதவீத சரிவாகும்.
அமெரிக்க கொள்கைகளுக்கான தேசிய அமைப்பு, அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை பிரிவில் ஹெச்-1பி விசா குறித்து விவரங்களை கேட்டுப் பெற்றுள்ளது. இதன்படி டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டுகளை விட 51 சதவீத இழப்போடு 2,312 ஹெச்-1பி விசாக்களை பெற்றுள்ளது. இன்போஸிஸ் 57 சதவீத இழப்போடு 1,218 விசாக்களையும், விப்ரோ 1,210 விசாக்களையும் பெற்றுள்ளன.
டெக் மஹிந்திரா மட்டும் முந்தைய ஆண்டை விட அதிகமாக 2017-ம் ஆண்டில் 2,233 விசாக்களை பெற்றுள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் தலைமையகத்தை கொண்டுள்ள காக்னிசண்ட் நிறுவனம் மட்டும் அதிகபட்சமாக 3,194 ஹெச்-1பி விசாக்களை பெற்றுள்ளது.
இந்திய நிறுவனங்களுக்கான விசா எண்ணிக்கை குறைந்ததற்கு கிளவுட் கம்ப்யூட்டிங், ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் போன்ற டிஜிட்டல் சேவைகள் மூலம் தொழில்நுட்ப பணியாளர்களின் தேவை குறைவது மற்றும் உள்நாட்டு பணியாளர்களை பயன்படுத்தும் நோக்கம் ஆகியவையே காரணம் என்றும் அமெரிக்க கொள்கைகளுக்கான தேசிய அமைப்பு கூறியுள்ளது.
ஹெச்-1பி விசா வழங்குவதல் காட்டப்படும் கெடுபிடி, வாழ்க்கை துணைக்கான பணியாற்றும் அனுமதி என்னும் ஹெச்-4 ஈஏடி விசாக்களை திரும்ப பெறும் கொள்கை ஆகியவை இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் நல்ல செய்தியல்ல!