மிக உயரமாக வெந்நீரை பீய்ச்சியடிக்கும் ஸ்டீம்போட் நீரூற்று அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் உள்ளது.
கடந்த மார்ச் 15-ம் தேதியிலிருந்து ஏப்ரல் 27-ம் தேதி வரை மூன்று முறை இதிலிருந்து வெந்நீர் வெளிப்பட்டது. அடிக்கடி இது வெந்நீரை கொட்டாது. ஆனால், இதிலிருந்து வெந்நீர் கொப்பளித்தால், உலகிலேயே வேறு எந்த வெந்நீர் ஊற்றுக்களையும் விட அதிக உயரமாக கொப்பளிக்கும்.
இந்த மார்ச் மாதத்திற்கு முன்பு கடைசியாக 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடைசியாக வெந்நீரை பீய்ச்சியது.
"இது கண்கவரும் ஊற்று. பொதுவாக, இது மிக உயரமாகவே வெந்நீரை பீய்ச்சியடிக்கும்," என்று அமெரிக்காவின் மண்ணியல் விஞ்ஞானியும், யெல்லோஸ்டோன் எரிமலை ஆய்வு மையத்தின் பொறுப்பாளருமான மைக்கேல் போலண்ட் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் ஸ்டீம்போட் வெந்நீரூற்றிலிருந்து 200 முதல் 400 கன மீட்டர் அளவு வெந்நீர் வெளிப்பட்டுள்ளது. இது, அதே தேசிய பூங்காவிலிருக்கும் ஓல்ட் ஃபெய்த்புல் நீரூற்றிலிருந்து வெளிப்படும் நீரை விட பத்து மடங்கு அதிகமாகும்.