உலகின் வெப்பநிலை உயர, உயர ஆர்க்டிக் துருவத்தில் பனி உருகுவது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது சிறிய அளவு பனி இப்போதைய குளிர்காலத்தில் பதிவாகியுள்ளது. கோடைக்காலத்தில் பனி எப்போதும் இல்லாத அளவு உருகக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ஆர்க்டிக்கில் பனி உருகினால் எனக்கென்ன? என்று யாரும் அலட்சியமாக இருந்துவிட முடியாது. இயற்கையான உறைவிப்பானாக செயல்படும் ஆர்க்டிக் துருவத்தில் கடலில் உள்ள பனி உருகுவது உலக தட்பவெப்ப நிலையில் பல எதிர்மறை மாறுதல்களை கொண்டு வரும். ஆகவே, உங்கள் வீட்டு ரெப்ரிஜிரேட்டரில் உள்ள ஃப்ரீசர் மொத்தமாக உருகினால் கவலைப்படுவதைக் காட்டிலும் ஆர்க்டிக் பனி உருகுவது குறித்து அக்கறை கொள்வதும் அவசியம்.
ஆர்க்டிக் பனி உருகுவதற்கும் உலகம் வெப்பமயமாதல், கடல்மட்டம் உயர்வது, இயற்கை பேரிடர் அதிகரிப்பது போன்றவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது. வெள்ளை காரைக் காட்டிலும் கறுப்பு கார் கோடைக்காலத்தில் அதிகமாக சூடாகும் என்ற எளிய தத்துவமே ஆல்பேடோ எபெக்ட்டின் பின்னால் இருக்கிறது.
ஆர்க்டிக் போன்ற பனி பிரதேசங்களில் காணப்படும் பனி, சூரிய ஒளியின் எண்பது விழுக்காடு ஆற்றலை எதிரொளித்து திருப்பி அனுப்புகிறது. ஆனால், பனி உருகி நிலப்பரப்பு, கடல் பரப்பு தெரியும்போது, அவை சூரிய ஒளியில் தொண்ணூறு விழுக்காடு ஆற்றலை கிரகித்துக் கொள்கின்றன. அது உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பெருங்கடல் இயற்பியல் பேராசிரியர் பீட்டர் வாடெம்ஸ்.
ஆர்க்டிக்கில் உருகும் பனி, நேரடியாக கடல்மட்டம் உயருவதற்கு காரணமாவதில்லை. மாறாக, ஆர்க்டிக் மாறும் தட்பவெப்ப சூழல், கிரீன்லாந்தில் நிலப்பரப்பில் உள்ள பனி உருகுவதற்கு காரணமாகிறது. டெக்சாஸை போன்று மூன்று மடங்கு பரப்பில் உள்ள பனி உருகும்போது கடல் மட்டம் 20 அடி வரைக்கும் உயருவது வாய்ப்புள்ளது.
தற்போதே ஃப்ளோரிடா, நியூ ஜெர்ஸி மற்றும் மேரிலேண்ட் பகுதியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இந்த நிலைமை வருங்காலங்களில் இன்னும் மோசமாகலாம். குறிப்பாக அலாஸ்காவில் உள்ள பனி, கடலின் பெரிய அலைகளிலிருந்து நகரங்களை பாதுகாக்கிறது. பியரிங் கடலில் உள்ள பனி உருகியபோது கடல் அலை டியோமேட் நகரை சூழ்ந்ததுபோன்று எதிர்காலத்திலும் நிகழும்.
ஆர்க்டிக்கில் ஏற்படும் இந்த மாற்றம், உயர் வளி மண்டலத்தில் காற்றின் போக்கையும் பாதிக்கும். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கிழக்குப் பகுதியில் உறைய வைக்கக்கூடிய வெப்பநிலை, இந்த குளிர்காலத்தில் நிலவியது இதற்கு ஓர் உதாரணம்.
1980-ம் ஆண்டிலிருந்து கோடைக்காலத்தில் பனி 40 விழுக்காடு உருகிற்து என்று நாசா கூறுகிறது. பனியே இல்லாத ஆர்க்டிக்கை பார்க்கும் கோடைக்காலம் எப்போது வரும் என்று உறுதியாகக்கூற முடியாவிட்டாலும் இன்னும் 20 முதல் 40 ஆண்டுகளில் பனி முற்றிலும் உருகிப்போன ஆர்க்டிக்கை காண நேரலாம்.